வணிகம்

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள உணவுச் சந்தை - சரிந்த உணவு விற்பனை

webteam

சமூகத்தில் என்ன மாற்றம் நடந்தாலும் அது உடனடியாகப் உணவுச் சந்தையில்தான் பிரதிபலிக்கிறது. தற்போது கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் உணவுப் பொருட்களின் தேவை மற்றும் விற்பனை எப்படி இருக்கிறது என்பதனை பார்க்கலாம்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் தொடர்ந்து நீடித்து வருவதால் வேலைவாய்ப்பை இழந்துள்ள மக்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளனர். இதனால் உணவுப் பொருட்களின் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொன்னி, கிச்சடி சம்பா மாதிரியான உயர் ரக அரிசிகளின் வியாபாரம் குறைந்து, சாதாரண அரிசி தான் தற்போது அதிகம் விற்பனையாகிறது. சிலர் நிவாரணமாக கொடுத்த ரேஷன் அரிசியை சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.

ஊரடங்குக்கு முன்னே சமையல் எண்ணெய் மட்டும் தினசரி டன் கணக்கில் வியாபாரமாகும். ஆனால் தற்போது, மாதத்திற்கு 5 லிட்டர் எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் 2 அல்லது 3 லிட்டர் தான் வாங்குகிறார்கள். அதேபோல் காய்கறி விற்பனையும் வெகுவாக குறைந்துள்ளது.

கருவாடு அதிகம் விற்பனையானால் நாட்டில் பஞ்சம் நெருங்கிக் கொண்டிருப்பதாக கிராமங்களில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டு இருப்பதாலும், விலைவாசி உயர்ந்து இருப்பதாலும் கருவாடு விற்பனை அதிகரித்துள்ளது.

பொதுமுடக்கத்தினால் ஏற்பட்டுள்ள வறுமை அன்றாட வியாபாரத்தையும், பொதுமக்களையும் பெரிய அளவில் பாதித்துள்ளதால் இதிலிருந்து எப்போது மீளுவோம் என்று அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.