கொரோனா பரவலால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஐக்கிய அரபு நாடுகளில் மட்டும் சொத்துக்களின் விற்பனை 230 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கொரோனா கால கட்டத்தில், வெளிநாடுகளில் வசிக்கும் பணக்காரர்களும், நடுத்தர மக்களும் கூட அரபு நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்கான காரணம் என்ன. தற்போது பார்க்கலாம்.
ஐக்கிய அரபு நாடுகள் கொரோனா பரவல் காரணமாக, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பலரும், தங்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்விடம் தேடி அலையும் சூழலில், ஐக்கிய அரபு நாடுகள் தான் தற்போது உலகில் உள்ள பணக்காரர்கள் பெரும்பாலானவர்களுக்கு விருப்பமான இடமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல உலக நாடுகள் கடுமையாக போராடி வரும் சூழலில், ஐக்கிய அரபு நாடுகள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பது தான், பலரும் அங்கு இடம்பெயர்வதற்கு காரணமாக தற்போது உள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் சராசரியாக தினமும் 2,000 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது. நாட்டின் எல்லைகள் வழக்கம் போல திறக்கப்பட்டுள்ளது. உள் அரங்குகளில் மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. பொதுமக்கள் வழக்கம் போல கடற்கரையில் விளையாடி மகிழலாம். இது போல கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் இல்லாத நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு நாடுகள் இருப்பதால், வெளிநாட்டினர் பலரும் அங்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனை உறுதி செய்யும் வகையில், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மட்டும் ஐக்கிய அரபு நாடுகளில், ஆடம்பர சொத்துக்களின் விற்பனை 230 விழுக்காடு அதிகரித்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 84 சொத்துக்கள் விற்பனையாகியுள்ளதாகவும், இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத உயர்வு எனத் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள பணக்காரர்கள் பலரும் தங்களது சொத்துக்களை விற்றுவிட்டு, அரபு நாடுகளில் சொத்துக்களை வாங்கி வருகின்றனர்.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் இருந்து வந்தால் தனிமைபடுத்திக் கொள்ளத் தேவையில்லை என்பதால் வெளிநாட்டினர் வந்து இங்கு வசிக்கத் தொடங்கியுள்ளதாக துபாயில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி ஒன்றே கொரோனாவை கட்டுப்படுத்தும் என்பதை நிரூபித்துள்ளது, ஐக்கிய அரபு நாடுகள். அங்கு தடுப்பூசி போடும் திட்டமும் மிக எளிமையாக்கப்பட்டுள்ளது.இதுவரை 50 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் வேலை மற்றும் பணி செய்வதற்கான விசா வைத்துள்ளவர்களுக்கு இங்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஃபைசர் தடுப்பூசி இந்தியாவில் போடப்படாத நிலையில், இந்தியாவிலிருந்து தடுப்பூசி போடுவதற்காக, பணக்காரர்களும், ஏன் நடுத்தர மக்களும் கூட ஐக்கிய அரபு நாடுகளுக்கு கடந்த மூன்று மாதங்களில் அதிகளவில் பயணித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.