வணிகம்

சேரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு தடை

சேரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு தடை

Rasus

சேரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய சுகாதார துறை அமைச்சகம் 328 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. உடல் வலி போக்குவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட சேரிடான், தோல் பிரச்னைகளுக்கான பான்டெர்ம் (PANDERM), நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டு வந்த GLUCONORM PG மற்றும் LUPIDICLOX, TAXIM AZ உள்ளிட்ட மருந்துகள் இந்த பட்டியலில் அடங்கும்.

மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு 349 மருந்து பொருட்கள் உட்கொள்ள தகுதியற்றவை என கூறி அவற்றின் பயன்பாட்டுக்கு தடை விதித்தது. ஆனால் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், 2017-ஆம் ஆண்டு, மருந்துகள் குறித்த ஆலோசனை குழுவான டிடிஏபி (DTAB) இது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் அரசு வெளியிட்ட பட்டியலில் 328 மருந்துகள், மக்கள் உட்கொள்ள தகுதியற்றவை என்றும் ஆபத்தானவை என்றும் கூறி அவற்றை தடை செய்ய மருந்துகள் ஆலோசனைக் குழு பரிந்துரை செய்தது. அதே வேளையில் பட்டியலில் இருந்த DCOLD TOTAL, COREX ஆகியவற்றுக்கு தடை இல்லை என்றும், அரசு மீண்டும் இவை குறித்து ஆய்வு செய்து தடை செய்வதா என்பதை முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியதால் தற்போதைய தடையில் இருந்து இவை தப்பித்துள்ளன.