வணிகம்

சிமெண்ட் விலை மேலும் குறையும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சிமெண்ட் விலை மேலும் குறையும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

Veeramani

சிமெண்ட் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் சிமெண்ட் விலை ஜூன் முதல் வாரத்தில் 490 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் தமிழக அரசு வலியுறுத்தியதை தொடர்ந்து 20 முதல் 40 ரூபாய் வரை குறைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு, போக்குவரத்து செலவினங்கள் ஆகியவை உயர்ந்த காரணத்தால் கடந்த 6ஆம் தேதி சிமெண்ட் விலை 470 முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டதாகவும் அரசு தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தற்போது 440 முதல் 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மார்ச் மாத விலையுடன் ஒப்பிடுகையில் 4.7 சதவிகிதம் மட்டுமே விலை உயர்ந்திருப்பதாகவும் ஆனால் 33 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள 20 ரூபாய் விலையேற்றத்தை மேலும் குறைக்க தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் 350 முதல் 360 ரூபாய் வரையில் தரமான சிமெண்ட்டை விற்றுவருவதாகவும் தனியாருடன் ஒப்பிடுகையில் இது 90 ரூபாய் விலை குறைவு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஓரிரு வாரங்களில் வலிமை என்ற பெயரில் தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சிமெண்ட்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதன்மூலம் சில்லறை விற்பனை விலை மேலும் குறைவும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.