வணிகம்

சரிந்தது 55% கச்சா எண்ணெய் விலை : 3% மட்டுமே பெட்ரோல் விலை குறைப்பு

சரிந்தது 55% கச்சா எண்ணெய் விலை : 3% மட்டுமே பெட்ரோல் விலை குறைப்பு

webteam

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் வி‌லை ஒரு மாதத்தில் சுமார் 55% சரிந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை சுமார் 3 சதவிகிதம் அளவிற்கே குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் 59.40 டாலரா‌க இருந்தது. இந்நிலையில் ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 55.91 சதவிகிதம் குறைந்து, மார்ச் 19ஆம் தேதி ஒரு பீப்பாய் 24.97 டாலராக வர்த்தகமாகியது.

இந்தச் சூழலில், சென்னையில் சென்ற பிப்ரவரி 19ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.68 காசாக விற்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களில் சிறிய இறக்கத்துடன் காணப்பட்ட பெட்ரோல் விலை மார்ச் 19ஆம் தேதி ரூ.72.28 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை 3.21 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது.

சென்னையில் டீசல் விலை கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஒரு லிட்டர் ரூ.68.27 காசு என விற்பனையானது. அடுத்து வந்த நாட்களில் அதன் விலை சற்று குறைந்த நிலையில், மார்ச் 19ஆம் தேதி ஒரு லிட்டர் ரூ.65.71 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு மாத‌த்தில் டீசல் விலையும் 3.74 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது.

கொரோனோ பாதிப்பால், கச்சா எண்ணெய் தேவை குறைந்த நிலையில், உற்பத்தியை குறைக்க, எண்ணெய் வளநாடுகளின் அமைப்பான ஒபெக் வலியுறுத்தியிருந்தது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து, உற்பத்தியை அதிகரிக்கப்போவதாகக் கூறிய நிலையில், அதற்கு பதிலடி தரும் விதமாக சவுதி அரேபியாவும் உற்பத்தியை அதிகரித்து, விலையை குறைக்கப்போவதாகவும் அறிவித்தது. இதனால் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மளமளவென சரிந்தது.

ஆனால் சந்தை மதிப்பின் அடிப்படையிலேயே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதாகக் கூறும் எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை சரிவின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.