வணிகம்

'யுனிகார்ன்' க்ளப்பில் இணைந்த பாரத் பே... சாத்தியமானது எப்படி?

'யுனிகார்ன்' க்ளப்பில் இணைந்த பாரத் பே... சாத்தியமானது எப்படி?

நிவேதா ஜெகராஜா

சில ஆண்டுகளுக்கு முன்பு மாதத்துக்கு ஒரு நிறுவனம் 'யுனிகார்ன்' பட்டியலில் இணையும். ஆனால், தற்போது வாரத்துக்கு ஒரு நிறுவனம் 'யுனிகார்ன்' பட்டியலில் இணைகிறது. லேட்டஸ்ட் வரவு 'பாரத் பே'. 2021-ம் ஆண்டு இந்தப் பட்டியலில் இணையும் 19ஆவது நிறுவனம் 'பாரத் பே'.

37 கோடி டாலர் முதலீட்டை (சிரீயஸ் இ) இந்த நிறுவனம் நேற்று பெற்றிருக்கிறது. டைகர் குளோபல், செக்யோயா கேபிடல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்த முதலீட்டை செய்திருக்கின்றன. இதன் பிறகு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 285 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது.

ஆறு மாதங்களில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மூன்று மடங்குக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த பிப்ரவரியில் நிதி திரட்டும்போது (10.8 கோடி டாலர்) நிறுவனத்தின் சந்தை மதிப்பு 92.2 கோடி டாலாராக இருந்தது. தற்போது 285 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. இதில், 2 கோடி டாலர் அளவுக்கு ஆரம்பகால முதலீட்டாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிதிக்கு பிறகு ஃபின்டெக் துறையில் ஐந்தாவது பெரிய நிறுவனமாக 'பாரத் பே' உயரந்திருக்கிறது. பேடிஎம், போன்பே, ராசர்பே மற்றும் பைன்லேப்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு 'பாரத் பே' இருக்கிறது.

தற்போது இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவும், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியை வாங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'பாரத் பே' மற்றும் 'செண்ட்ரம்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த கூட்டுறவு வங்கியை வாங்க உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு 'பே பேக்' நிறுவனத்தை 'பாரத் பே' வாங்கியது நினைவிருக்கலாம். "அடுத்த சில ஆண்டுகளுக்கு புதிய நிறுவனத்தை வாங்கும் திட்டம் ஏதும் இல்லை. தற்போது இருக்கும் பிரிவுகளில் கவனம் செலுத்த இருக்கிறோம். தவிர போதுமான அளவுக்கு நிதி உள்ளது. இந்த நிதி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும். அதன் பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடுவதை குறித்து திட்டமிடுவோம்'' என தலைமைச் செயல் அதிகாரி அஷீர் குரோவர் தெரிவித்திருக்கிறார்.

100 கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமே 'யுனிகார்ன்' நிறுவனம் என்று வகைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.