வணிகம்

ஐபிஎல் அப்டேட்ஸ்: எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடப்பது கடினம்; வருவாய் இழப்பு எவ்வளவு?

ஐபிஎல் அப்டேட்ஸ்: எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடப்பது கடினம்; வருவாய் இழப்பு எவ்வளவு?

நிவேதா ஜெகராஜா

நடப்பு ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருந்த ஐபிஎல் போட்டித் தொடர் பாதியிலே முடிவடைந்திருக்கிறது. இதனால் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. பாதியில் முடிவடைந்த தொடர் மீண்டும் நடக்குமா, ஒருவேளை நடந்தால் இந்தியாவில் நடக்குமா அல்லது வெளிநாட்டில் நடக்குமா, எப்போது நடக்கும்? ஒருவேளை நடக்காமல் போனால் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என தெரிகிறது. அப்படியானால், விளம்பர நிறுவனங்களுக்கு என்னவாகும் என பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.

விளையாடிய போட்டிக்கு மட்டுமே பணம்!

ஐபிஎல் போட்டிக்கான சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. 2018 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு ரூ.16,348 கோடிக்கு இந்த உரிமத்தை வாங்கி இருக்கிறது. அதாவது, ஒரு போட்டிக்கு சுமார் ரூ.54.5 கோடி அளவுக்கு ஸ்டார்போர்ட்ஸ் பிசிசிஐக்கு செலுத்துகிறது.

இதன் அடிப்படையில் ஸ்பான்ஸர்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்திருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். இந்த நிலையில், 60 போட்டிகள் கொண்ட தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருப்பதால் விளையாடிய போட்டிகளுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பான ஸ்பான்ஸர்கள் மற்றும் விளம்பர ஏஜென்ஸிகளுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தகவல் அனுப்பி இருக்கிறது. அதேபோல மீதம் இருக்கும் போட்டிகள் மீண்டும் நடக்கும் பட்சத்தில், ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் விளம்பரக் கட்டணம் இருக்கும் என்றும், தற்போதைய ஸ்பான்ஸர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஸ்டார் ஸ்போர்ஸ் தெரிவித்திருக்கிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 18 ஸ்பான்ஸர்களையும், ஒடிடி தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் 14 ஸ்பான்ஸர்களையும் இணைத்திருக்கிறது. காலவரையில்லாமல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதால் பல ஸ்பான்ஸர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

2021-ம் ஆண்டு நடந்த ஐபிஎல்-ல் மொத்தமாக 35.2 கோடி வாடிக்கையாளர்கள் ஐபிஎல் தொடரைப் பார்த்திருப்பார்கள் என பார்க் அமைப்பு தகவல் வெளியிட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 34.9 கோடி ஆகும்.

ஐபிஎல் இந்தியாவில் நடக்காது

மீதம் இருக்கும் போட்டிகள் இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார். 14 நாட்கள் தனிமைப்படுத்தும் சூழல் இருப்பதால் இந்தியாவில் இதற்கான வாய்ப்பு இல்லை.

சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி (ஜூன் 2021) பங்கேற்க உள்ளது. இதனை முடித்துக்கொண்டு இந்திய அணி இலங்கை தொடரில் பங்கேற்க உள்ளது. மேலும் ஜூலையில் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரை முடித்துக்கொண்டு மீண்டும் இங்கிலாந்து செல்ல இருக்கிறது.

இந்தத் தொடருக்கு பிறகு, ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில், டெஸ்ட் இறுதிப் போட்டிக்கு பிறகு ஜூலையில் நடக்கலாம் என சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் மிதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த முன்வந்திருப்பதாகவும் தெரிகிறது.

ஒருவேளை ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாவிட்டால் ரூ.2,500 கோடி அளவுக்கு பிசிசிஐ-க்கு இழப்பு ஏற்படும் என சில நாட்களுக்கு முன்பு சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

இதுவரை நடந்த போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பான்ஸர்கள், ஸ்டார்ஸ்போர்ஸ் ஆகியவை பிசிசிஐக்கு வழங்கும். இதனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வருமான இழப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது.