கடந்த ஆண்டை விட 159% அதிகமாக இந்தியாவின் வங்கிகளில் மோசடி நடைபெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஆண்டு தோறும் வங்கி மோசடிகளும், கடன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தனியார் வங்கிகளைவிட பொதுத்துறை வங்கிகளிலேயே இந்த கடன் மோசடிகள் அதிகம் நடைபெறுகின்றன. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் நடைபெற்ற வங்கி மோசடிகளின் மதிப்பு ரூ.71,500 கோடியாக இருந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் இந்த மோசடித் தொகை 159% அதிகரித்து, ரூ.1,82,051 கோடியாக அதிகரித்துள்ளது.
நடப்பு ஆண்டில் மட்டும் மொத்தம் 8,700 வங்கி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 4,413 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. அதன்மூலம் ரூ.1,48,400 கோடி மோசடியும் செய்யப்பட்டிருக்கிறது. தனியார் வங்கிகளை பொறுத்தவரை 3,066 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.34,211 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
இதுதவிர ஆன்லைன் மற்றும் கார்டுகள் மூலம் மட்டும் ரூ.195 கோடி மோசடி செய்யப்பட்டு, குற்றஞ்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வங்கிகள் தரப்பிலிருந்து ஆரம்பக்கட்ட எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்புவதில் தாமதம், தணிக்கையின்போது முறையற்ற அறிக்கைகளை தாக்கல் செய்தது, கூட்டு கடன்களில் நடைபெற்ற மோசடிகளை கண்டறிதல் ஆகியவற்றில் ஏற்றப்பட்ட குளறுபடிகள் மற்றும் தாமதமே இதற்கு காரணம் என ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.