வணிகம்

பஜாஜ் குழும சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர்: இந்தியாவின் 4-வது 'பெரிய' குடும்ப நிறுவனம்

பஜாஜ் குழும சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர்: இந்தியாவின் 4-வது 'பெரிய' குடும்ப நிறுவனம்

நிவேதா ஜெகராஜா

பஜாஜ் குழுமத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலராக (ரூ.7.5 லட்சம் கோடி) உயர்ந்திருக்கிறது. டாடா, ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்துக்கு அடுத்து நான்காவது பெரிய குடும்ப நிறுவனமாக பஜாஜ் குழுமம் உயர்ந்திருக்கிறது.

ஹெச்டிஎஃப்சி குழுமத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு மேல் இருந்தாலும், இது புரஃபஷனல்களால் நடத்தப்படும் நிறுவனம். ஆனால், மற்ற நான்கு நிறுவனங்களும் குடும்ப நிறுவனங்கள் ஆகும்.

பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ், பஜாஜ் ஹிந்துஸ்தான் உள்ளிட்ட சில நிறுவனங்கள் உள்ளன. இதில் பஜாஜ் ஹிந்துஸ்தான், முகுந்த் ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு 100 சதவீதத்துக்கு உயர்ந்திருக்கின்றன.

இதுவரை டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்கள் மட்டுமே இருந்தன. இந்த நிலையில், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு இந்த ஆண்டில் நான்கு மடங்குக்கு மேல் உயர்ந்ததால் 100 பில்லியன் டாலர் குழுமமாக அதானி மாறியது.

இது தவிர பல குடும்ப நிறுவனங்களின் சந்தை மதிப்பு இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது. ஜே.எஸ்.டபிள்யூ ஹிந்துஜா, வேதாந்தா மற்றும் ஏவி பிர்லா குழுமம் ஆகியவற்றின் சந்தை மதிப்பு இந்த ஆண்டு வேகமாக உயரந்திருக்கிறது.