சிட்டி வங்கி 1902-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தது. அதன் ரீடெய்ல் பிரிவு 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிட்டி வங்கி இந்திய ரீடெய்ல் பிரிவில் இருந்து வெளியேறுவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. சர்வதேச அளவில் 13 நாடுகளில் இருந்தும் சிட்டி வங்கி வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில், அந்த வங்கியின் முக்கிய பிரிவுகளை ஆக்சிஸ் வங்கி வாங்கியுள்ளது. இதனால் அந்த வங்கியின் எந்தெந்த சேவைகள் ஆக்சிஸ் வங்கிக்கு மாறுகிறது என்பது குறித்து இங்கு காண்போம்.
ரீடெய்ல், கிரெடிட் கார்டு, சிறு கடன்கள், வெல்த் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பிரிவுகளை ஆக்ஸிஸ் வங்கி வாங்கி இருக்கிறது. இந்த இணைப்பு 2023-ம் ஆண்டில் முடிவடையும்.
சிட்டி வங்கியில் பணியாற்றும் 3,600 பணியாளர்களும் ஆக்சிஸ் வங்கியின் பணியாளர்களாக மாறுவார்கள்.
கிரெடிட் கார்டு பிரிவில் ஆக்ஸிஸ் வங்கி நான்காவது இடத்தில் இருக்கிறது. 86 லட்சம் கிரெடிட் கார்டு பயனாளர்கள் உள்ளனர். சிட்டி வங்கி வசம் 25 லட்சம் கிரெடிட் கார்டு பயனாளர்கள் உள்ளனர்.
வெல்த் மேனேஜ்மெண்ட் பிரிவில் 1.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சிட்டி வங்கி வசம் உள்ளன. இந்தப் பிரிவில் ரூ.12,325 கோடிக்கு ஆக்சிஸ் வாங்கி இருக்கிறது.
"இத்தனை ஆண்டு காலமாக நாங்கள் சீரான வளர்ச்சியை அடைந்து வந்திருந்தோம். ஆனால் எங்களுடைய இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்திருக்கிறோம். இதன் மூலம் எங்களுக்கும் எங்களுடைய போட்டியாளர்களுக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைந்திருக்கிறது" என ஆக்சிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் சௌத்ரி தெரிவித்திருக்கிறார்.
மேலும், இணைப்புக்கு பிறகு சிட்டி வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளர்களாக மாறுவார்கள். ஆக்சிஸ் வங்கியின் டெக்னாலஜி மற்றும் சேவைகள், சிட்டி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். சிட்டி வங்கிக்கு சொந்தமாக 18 நகரங்களில் உள்ள 7 அலுவலகங்கள், 21 கிளைகள் 499 ஏடிஎம் மையங்கள் ஆக்சிஸ் வங்கிக்கு இனி கிடைக்கும்.
--- வாசு கார்த்தி