போஷ் (Bosch) இந்திய நிறுவனம் இந்தக் காலாண்டில் ஒரு மாதத்திற்கு 10 நாட்களுக்கு மட்டும் தனது உற்பத்தியை நிறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் ஆட்டோ மொபைல் துறையின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன விற்பனை மிகவும் மந்தம் நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக பிரபல ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதற்காக அந்த நிறுவனங்கள் தங்களின் சில நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தி ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றன.
இந்நிலையில் பிரபல ஜெர்மன் ஆட்டோ மொபைல் நிறுவனமான போஷ் இந்தக் காலாண்டில் ஒரு மாதத்திற்கு 10 நாட்களுக்கு தன் உற்பத்தியை நிறுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார். அதில், “நாங்கள் பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு எங்களின் முடிவை பற்றி தெரிவித்து விட்டோம். அதாவது இந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஒரு மாதத்திற்கு 10 நாட்கள் உற்பத்தி இல்லாத நாட்களாக கடைபிடிக்க உள்ளோம் என்பதை தெரிவித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
போஷ் நிறுவனத்திற்கு இந்தியாவில் 18 உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் 7 வளர்ச்சி நிறுவனங்களும் உள்ளன.