வணிகம்

யூனிகார்ன் தலைமை அதிகாரி அந்தஸ்தை பெற்ற இந்தியப் பெண்மணி

யூனிகார்ன் தலைமை அதிகாரி அந்தஸ்தை பெற்ற இந்தியப் பெண்மணி

webteam

ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஷிலிங்கோவின் இணை நிறுவனரான இந்தியப் பெண்மணி அங்கிடி போஸ் யூனிகார்னின் தலைமை நிர்வாக அதிகாரி அந்தஸ்தை பெற்றுள்ளார்.

தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் லாப மதிப்பை கணக்கிட்டு யூனிகார்ன் என்ற தகுதி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு நிறுவனம் யூனிகார்ன் தகுதியை பெற வேண்டுமென்றால் குறைந்தது 1பில்லியன் டாலர்கள் அதாவது 100 கோடி டாலர்கள் சந்தை மதிப்பில் அந்த நிறுவனம் செயல்பட வேண்டும். அப்படி யூனிகார்ன் மதிப்பை பெறும் நிறுவனத்தின் நிறுவனருக்கும் 'யூனிகாரின் தலைமை நிர்வாக அதிகாரி' என்ற அந்தஸ்து வழங்கப்படும். இந்த யூனிகார்ன் தகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்பு தேர்வு செய்து வழங்குகிறது. 

10 பில்லியன் டாலர்களை சந்தை மதிப்பாக பெற்றால் 'டெகாகார்ன்' என்றும், 100 பில்லியன் டாலர்களை சந்தை மதிப்பு கொண்ட நிறுவனத்துக்கு 'ஹெக்டோகார்ன்' என்றும் தரம் பிரிக்கப்பட்டு தகுதி வழங்கப்படுகிறது.

இதன்படி யூனிகார்ன் என்ற தகுதியை ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஷிலிங்கோ பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் இணை நிறுவனரான இந்தியப் பெண்மணி அங்கிடி போஸுக்கு யூனிகாரின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற அந்தஸ்தும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த அந்தஸ்தை பெறும் முதல் இந்தியப்பெண்மணி அங்கிடி போஸ் ஆவார்.

மும்பையைச் சேர்ந்த அங்கிடி போஸ், 2012ம் ஆண்டில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றார். தற்போதைய நிலவரப்படி அங்கிடி போஸ் நிறுவனமான ஷிலிங்கோவின் மதிப்பு 970 மில்லியன் டாலர்களாக உள்ளது. சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட 4 ஆண்டுகளின் ஷிலிங்கோ இந்த இடத்தை அடைந்துள்ளது. இந்தியாவின் பெங்களூருவிலும் இயங்கி வரும் இந்நிறுவனத்தில் 100க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த அங்கிடி போஸ், என்னுடைய பயணத்துக்கும் வெற்றிக்கும் நிறைய ஆண்கள் உதவியாக இருந்துள்ளனர். பெண் தொழில்முனைவோர்கள் அதிகரிக்கும் போது நிச்சயமாக தொழில்துறை இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.