வணிகம்

உணவு பொருள் சில்லறை விற்பனையில் களமிறங்கும் அமேசான்

உணவு பொருள் சில்லறை விற்பனையில் களமிறங்கும் அமேசான்

webteam

பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் இப்போது இந்தியாவில் உணவு பொருட்களின் சில்லறை விற்பனைக்கான உரிமையை பெற்றுள்ளது. 

அமேசான் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களைக் கவர ஸ்மார்ட் போன்கள், உடைகள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் பிக் பில்லியன் சேல் போன்ற பல்வேறு சலுகைகளை அடிக்கடி வழங்கி வாடிக்கையாளர்களின் கவனத்தையும் அது ஈர்த்து வந்தது. இந்நிலையில் உணவு வர்த்தகத்திலும் அமேசான் தற்போது களமிறங்கியுள்ளது.

அமேசானுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவு பொருள் சில்லறை விற்பனைக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி அமேசான் நிறுவனம் முழு உரிமை கொண்ட வர்த்தகத்தை இந்தியாவில் தொடங்கவுள்ளது. இதன் மூலம் அமேசான் உணவு பொருட்களை இருப்பு வைத்து ஆன்லைனில் விற்பனை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அமேசான் நிறுவனம் பிக் பஜார், ஸ்டார் பஜார், ஹைப்பர் சிட்டி ஆகிய விற்பனையாளர்களுடன் இணைந்து உணவு மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் அமேசானின் புதிய முதலீடு இந்த பழைய வர்த்தகத்தை பாதிக்குமா என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அமேசானின் இந்த அறிவிப்பால் சிறு வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் பாதிப்படைவார்கள் என்றும் ஒரு சாரார் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.