வணிகம்

செமி-கண்டக்டர் உற்பத்தியில் இறங்குகிறது டாடா குழுமம்!

செமி-கண்டக்டர் உற்பத்தியில் இறங்குகிறது டாடா குழுமம்!

நிவேதா ஜெகராஜா

தற்போது செமி-கண்டக்டர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டிருக்கிறது. வாகனம், எலெக்ட்ரானிக்ஸ் என அனைத்து சாதனங்களிலும் செமி கண்டக்டர் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஆனால் அதற்கு ஏற்ப உற்பத்தி இல்லை என்பதால், இந்தப் பிரிவில் பெரிய வாய்ப்பு உருவாகி இருக்கிறது. அதனை பயன்படுத்திக்கொள்ள டாடா குழுமம் திட்டமிட்டிருக்கிறது.

இந்தப் பிரிவில் முதலீடு செய்ய இருப்பதாக டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். "தற்போது சர்வதேச அளவில் சீனாவை நம்பியே இந்தத் துறை இருக்கிறது. இந்தப் பேரிடர் காலத்துக்கு பிறகு ஒரே பகுதியை சார்ந்திருக்க உலக நாடுகள் விரும்பாது. அதனால் இந்த துறையில் பெரும் வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

ஏற்கெனவே புதிய தொழில்கள் பலவற்றில் டாடா முதலீடு செய்துவருகிறது. எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, 5ஜி டெக்னாலஜி சாதனங்கள் ஆகியவற்றில் டாடா குழுமம் முதலீடு செய்திருக்கிறது. அதேபோல செமி-கண்டக்டர் துறையிலும் களம் இறங்க உள்ளது. இருந்தாலும் துல்லியமான திட்டம் என்ன என்பதை சந்திரசேகரன் விளக்கவில்லை.