இப்போதெல்லாம் கல்லூரி படிப்புகளை முடிப்பவர்கள் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில் பணிபுரிவதை விரும்புவதில் எந்தவிதமான ஆச்சர்யமும் இல்லை. ஆனால், 26 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஆதித்யா பூரி தலைமைச் செயல் அதிகாரியாக இணைந்தார்.
தற்போது சர்வதேச வங்கித்துறையில் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கிறார் ஆதித்யா பூரி. ரிசர்வ் வங்கி விதிமுறைபடி 70 வயதை கடந்தவர்கள் வங்கியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கக் கூடாது என்னும் ஒரே காரணத்துக்காக கடந்த மாதம் 26ஆம் தேதி ஓய்வு பெற்றார். சில நாட்களுக்கு முன்பு சர்வதேச அளவில் சிறந்த வங்கியாளர் ஆதித்யா பூரி என முக்கிய பத்திரிகையான எகனாமிஸ்ட் கட்டுரை எழுதி இருக்கிறது. என்ன காரணத்துக்காக என்பதை பார்க்கும் முன் அவர் செய்த பிற விஷயங்களை பார்ப்போம்.
1994-ம் ஆண்டே வங்கித்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர் ஆதித்யா பூரி. சிட்டி பேங்கின் மலேசியா பிரிவில் முக்கியமான பொறுப்பில் பூரி பணியாற்றினார். அப்போது இந்தியாவில் தனியார் வங்கிகளுக்கு அனுமதி கொடுக்க தொடங்கிய சமயம். அதன்படி ஹெச்டிஎஃப்சி குழுமத்துக்கு வங்கி அனுமதி கிடைத்தது.
சிட்டி வங்கி போன்ற சர்வதேச வங்கியில் பணியாற்றிய பூரி, தீபக் பரேக் அழைக்கிறார் என்ற காரணத்துக்காக புதிதாக தொடங்கப்பட இருக்கும் வங்கியில் இணைந்தார். 1994ஆம் ஆண்டு முதல் சமீபம் வரை தொடர்ந்து 26 ஆண்டுகள் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்திருக்கிறார்.
சர்வதேச அளவில் பத்தாவது பெரிய வங்கியாக உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கியில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த வங்கியின் சந்தை மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் கோடியாக உள்ளது. சிட்டி வங்கி மற்றும் ஹெச்எஸ்பிசி ஆகிய வங்கிகளை விட பெரிய வங்கியாக ஹெச்டிஎஃப்சி வங்கி திகழ்கிறது.
பல புதுமையான சேவைகள், தொழில்நுட்ப ரீதியில் பல முன்னெடுப்புகள் என பல வகைகளிலும் ஹெச்டிஎஃப்சி வங்கி தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆதித்யா பூரி.
'எகனாமிஸ்ட்' கூறுவது என்ன?
ஹெச்டிஎஃப்சி வங்கி தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 16,000 சதவீதம் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. ஆண்டுக்கணக்கில் பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் 22 சதவீத வளர்ச்சி (சிஏஜிஆர்) முதலீட்டாளர்களுக்கு கொடுத்திருக்கிறது இந்த வங்கி.
ஆண்டுக்கு 22 சதவீதம் என்பது நிச்சயம் குறைந்த வளர்ச்சி கிடையாது. வங்கிகளில் 7 சதவீத அளவுக்கு மட்டுமே வட்டி இருக்கக் கூடிய சூழலில், தொடர்ச்சியாக 26 ஆண்டுகள் 22 சதவீத வளர்ச்சி என்பது மகத்தான சாதனைதான். மேலும் தெளிவான இலக்கு, ஒவ்வொரு சிறிய தகவல்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம், திறமையானவர்களை கண்டறிவது மற்றும் இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்துகொண்டது போன்றவை பூரியின் வெற்றிக்கு முக்கியமான காரணங்கள் என எகனாமிஸ்ட் கூறியிருக்கிறது.
வங்கித்துறையை பொறுத்தவரை வாராக்கடன் என்பது முக்கிய பிரச்னை. பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாமல் தனியார் வங்கிகளின் வாராக்கடனும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாராக்கடன் இதுவரை குறைந்த அளவிலேயே உள்ளது. மார்ச் மாதம் முடிவில் மொத்த வாராக்கடன் 1.3 சதவீதம் என்னும் குறைந்த அளவிலேயே உள்ளது. மற்றொரு முக்கிய தனியார் வங்கியின் மொத்த வாராக்கடன் 6 சதவீதம் என்னும் அளவில் இருக்கிறது.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா, ஆதித்யா பூரிக்கு நன்கு பழக்கம் என்றாலும் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி கடன் வழங்கவில்லை. நட்பு வேறு, தொழில் வேறு என்பது ஆதித்யாவின் கொள்கை.
ஒரு வங்கியை கட்டமைத்து சர்வதேச அளவில் பெரிய அளவிலான வங்கியாக உருவாக்கிவிட்டு கடந்த 26ஆம் தேதி வெளியேறி இருக்கிறார். இவருக்கு பதிலாக சஷிதர் ஜெகதீசன் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த நிலையில், சர்வதேச அளவில் முக்கியமான பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான கார்லேவின் (caryle) ஆலோசகராக சில நாட்களுக்கு முன்பு ஆதித்யா பூரி நியமனம் செய்யப்பட்டார்.
சமீபத்திய சர்ச்சை என்ன?
ஹெச்டிஎஃப்சி வங்கியில் இருந்து வெளியேற முடிவு செய்ததில் இருந்து தன்வசம் உள்ள பங்குகளை விற்கத் தொடங்கினார் ஆதித்யா பூரி. கடந்த ஜூலை மாதம் ரூ.840 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றார். மீதமுள்ள சில லட்சம் பங்குகளையும் வங்கியில் இருந்து வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு விற்றுவிட்டார். தற்போது அவரிடம் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் ஏதும் இல்லை.
அவருக்காக ஒதுக்கபட்ட பங்குகளை விற்பது அவரது உரிமை. ஆனால், வங்கியில் இருந்து வெளியேறும் போது முழுமையாக விற்றிருப்பது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்பத்தி இருக்கிறது. இனி, இந்தப் பங்கில் ஏற்றம் இருக்காதோ என்னும் மறைமுகச் செய்தியை சொல்ல வருகிறாரா பூரி என்னும் கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.
இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களில் நூற்றுக்கணக்கான ஃபண்ட்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையான மியூச்சுவல் ஃபண்ட்களில் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், 'உஷாராக' அவர் பங்குகளை முழுமையாக விற்றிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
"ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கில் நான் முதலீடு செய்வது அல்லது விற்பது வங்கியின் செயல்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இது என்னுடைய வங்கி அல்ல, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் உழைப்பால் செயல்படும் வங்கி" என கடந்த ஜூலையில் பதில் அளித்திருந்தார் பூரி.
ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கினை விற்பனை செய்ததை வைத்து மட்டும் அவரது செயல்பாட்டை நாம் மதிப்பிட முடியாது. ஹெச்டிஎஃப்சி மட்டுமல்லாமல் வங்கித்துறையில் இனிவரும் புதிய தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு பெஞ்ச்மார்க்காக மாறி இருக்கிறார் பூரி.
- வாசு கார்த்தி