இந்தியாவின் வெற்றிகரமான விமான நிறுவனம் இண்டிகோ. இந்த நிறுவனத்தின் தொடக்கத்தில் இருந்து தலைமையேற்று நடத்தியவர் ஆதித்யா கோஷ். 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார். தற்போது முதலீட்டாளர்கள் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்க இருக்கும் 'ஆகாசா' நிறுவனத்தில் இணைய இருக்கிறார்.
புதிய நிறுவனத்தில் 40 சதவீத பங்குகளை ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வைத்திருப்பார்கள். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான வினய் துபே வசம் 15 சதவீத பங்குகள் இருக்கும் என தெரிகிறது. மேலும், புதிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இவர் இருப்பார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், 'ஆகாசா'வின் இணை நிறுவனராக ஆதித்யா கோஷ் இணைகிறார். இவர் வசம் 10 சதவீதத்துக்கும் கீழான பங்குகள் இருக்கும். ஆனால் இவர் எந்த விதமான நிர்வாக பொறுப்பிலும் இருக்க மாட்டார் எனத் தெரிகிறது. அதேசமயம் புதிய நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதித்யா கோஷ் ஒயோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.
மிகவும் குறைந்த கட்டண விமான நிறுவனமாக (யுஎல்சிசி) தொடங்கப்படும் இந்த நிறுவனத்தில் வேறு சில பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய இருக்கிறார்கள்.
கோ ஏர் மற்றும் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து உயரதிகாரிகள் இணைய இருக்கிறார்கள். 3.5 கோடி டாலர் அளவுக்கு ராகேஷ் முதலீடு செய்ய இருக்கிறார்கள். 70 விமானங்களுடன் இந்த நிறுவனம் தொடங்கப்படும் என தெரிகிறது. விமான போக்குவரத்து துறை கடும் சிரமத்தில் இருக்கும்போது புதிய நிறுவனம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.