வணிகம்

தமிழக துறைமுகத்தை வாங்கியது அதானி குழுமம் !

தமிழக துறைமுகத்தை வாங்கியது அதானி குழுமம் !

சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை விலைக்கு வாங்கியுள்ளது குஜராத் மாநிலத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் அதானி குழுமம். காட்டுப்பள்ளி துறைமுகத்தை உருவாக்கி அதனை நிர்வகித்து வந்தது எல் அண்ட் டி நிறுவனம். இப்போது அந்த நிறுவனத்திடம் இருந்து 97 சதவித பங்குகளை வாங்கியுள்ளது அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார நிறுவனம்.

லார்சன் அண்ட் ட்யூப்ரோவின் இந்த விற்பனைக்காக காட்டுப்பள்ளி துறைமுகக் கம்பெனியாகிய மரைன் இன்ஃப்ராஸ்டச்சர் டெவலப்பார்ஸ் நிறுவனத்துக்கும் அதானி நிறுவனத்துக்கும் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 97 சதவித பங்குகளை ரூ.1950 கோடிக்கு விலைக்கு வாங்க அதானி சம்மதித்துள்ளது அதானி குழுமம். இந்திய துறைமுகங்களை இணைப்பதன் மூலம் தனது செயல் பாடுகளை விரிவுபடுத்தும் உத்தியாக காட்டுப்ள்ளி துறைமுகத்தை அதானி குழுமம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

காட்டுப்பள்ளி துறைமுகம் இந்தியாவின் நவீன துறைமுகங்களில் ஒன்று தமிழகம், கர்நாடக மாநிலங்களின் ஏற்றுமதிக்கும் இம்மாநிலங்களுக்கான இறக்குமதிக்கும் வாயிலாக இருக்கிறது. ஏற்கெனவே அதானி குழுமம் கேரள மாநில அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு விழிஞ்சியம் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. விழிஞ்சியம் துறைமுகம் சர்வதேச ஆழ்கடல் பன்முக துறைமுகத்தை மேம்படுத்த ரூ.4089 கோடியை செலவிடுகிறது.  

எங்கே இருக்கிறது காட்டுப்பள்ளி துறைமுகம் ?

காட்டுப்பள்ளி துறைமுகம் சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள இது ஆழ்கடல் துறைமுகமாகும். இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் 2013- ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதில் இரண்டு பெர்த்கள் உள்ளன. இதன் நீளம் 710 மீட்டராகும். இந்த பெர்த்களில் 6 கிரேன்கள் உ.ள்ளன. இவை சரக்குப் பெட்டகங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றவை. 

இந்தத் துறைமுகம் ஆண்டுக்கு 12 லட்சம் டியுஇ சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது. 
எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்கள் இப்பகுதியில் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்க உதவும். அத்துடன் மாநில அரசின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று அதானி குழும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை அதானி குழுமம் 7 துறை முகங்கள் அதாவது முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விசாகப்பட் டினம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது.