கடன்களுக்கான இ.எம்.ஐ மற்றும் வட்டி உள்ளிட்டவை அடுத்த 3 மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாட்டில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அத்துடன் ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் மற்றும் கூலிப் பணியாட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் பொருளாதார பாரத்தை குறைக்கும் வகையில் அனைத்து வங்கிகளும் அடுத்த மூன்று மாதங்கள் இ.எம்.ஐ வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் இன்று தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ வட்டி உள்ளிட்டவை வங்கிகளால் வசூலிக்கப்படாது என்றார்.
மேலும், ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனை வங்கி வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.