Pat Cummins Twitter
Cricket

”சொந்த நாட்டிற்காக விளையாடணும்னாலும் ஐபிஎல் அணிகிட்ட பெர்மிஷன் கேட்க வேண்டியிருக்கு”- பேட் கம்மின்ஸ்

கிரிக்கெட் வீரர்களை பயன்படுத்தும் நேரம் மற்றும் அதற்காக அந்நாட்டு வாரியத்தால் போடப்படும் ஒப்பந்தம் போன்றவற்றில் அதிக மாற்றத்தை ஐபிஎல் ஏற்படுத்தியுள்ளது என்று ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Rishan Vengai

ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ், இந்தியன் பிரீமியர் லீக்கான ஐபிஎல், ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதுகிறார். அதன்படி கிரிக்கெட் வீரர்கள் முழுநேர ஒப்பந்தங்களை ஒரு தனியார் லீக் உரிமையாளர்களுடன் எடுத்துக்கொள்வதோடு, தங்கள் நாடுகளுக்காக விளையாட வேண்டுமென்றால் கூட அவர்களிடம் அனுமதி பெற்று விளையாடும் நிலை உருவாகியுள்ளதாக கம்மின்ஸ் கூறியுள்ளார்.

நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் போன்ற சர்வதேச வீரர்கள், உலக நாடுகளில் நடக்கும் கிரிக்கெட் லீக் போட்டிகளில் ஃப்ரீலான்ஸர்களாக விளையாடுவதற்காக தங்கள் நாட்டு வாரியத்தின் மத்திய ஒப்பந்தங்களில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சருடன், ஐபிஎல்லின் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முழுநேர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Trent Boult

இந்நிலையில், அவரை சர்வதேச கிரிக்கெட்டில் பயன்படுத்த வேண்டும் என்றால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் இருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு அனுமதிபெற வேண்டும். இந்த அணுகுமுறை ஏற்கனவே கால்பந்து போட்டிகள் மற்றும் வீரர்கள் கடைப்பிடித்து வந்தாலும், தற்போது இது கிரிக்கெட்டிலும் அடியெடுத்து வைத்திருப்பதாக பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

விரைவில் 12 மாத சர்வதேச காலண்டரில் நிறைய மாற்றம் ஏற்படும்!

சிட்னியில் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் கம்மின்ஸ் கூறுகையில், “கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தின் அறிகுறி சிலகாலங்களாகவே இருந்துவருகிறது. ஆனால் அது தற்போது முழுவதுமாக வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். கடந்த காலத்தில் இருந்ததை போன்று சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு வீரர்களின் நேரத்தின் மீது ஏகபோக உரிமை இல்லை. ஐபிஎல் அதை ஒரு தசாப்தத்திற்கு முன்பே மாற்றிவிட்டது.

Jofra Archer

உங்களால் முடிந்தவரை உங்கள் நாட்டுக்காக விளையாடுவதை சிறப்பாகச் செய்ய வேண்டும். அதற்கான செயல்திறனை முடிந்தவரை அதிகமாக கடைப்பிடிக்க வேண்டும். இது சவாலான ஒன்று தான். ஆனால் இது இப்போது நம்மீது உள்ளது, அதைப் பற்றி நாம் ஆழமாக சிந்திக்கத் தொடங்க வேண்டும். சில ஆண்டுகளில் இந்த மாற்றமானது வேகமாக முன்னேறிச் செல்லும்போது, ​​12 மாத சர்வதேச காலண்டரில் அதிக வித்தியாசம் ஏற்படும் என்று நினைக்கிறேன்" என்று கம்மின்ஸ் கூறியுள்ளார்.

வீரர்களை நீங்கள் குறைகூற முடியாது!

சிறந்த வீரர்கள் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டை விரும்புவதை ஆஸ்திரேலியா விரும்பினாலும், அவர்கள் வேறுவிதமாக செல்ல நினைத்தால் அதை நாம் குற்றம் சாட்ட முடியாது. ஒரு பிரான்சைஸ் அதிகப்படியான வாய்ப்புகள் மற்றும் தொழிலை கொடுக்கும் போது, ​​​​அந்த விருப்பத்தை எடுக்கக்கூடிய வீரர்களை நீங்கள் குறை கூற முடியாது என்று நான் நினைக்கிறேன்.

Pat Cummins

மேலும் ஒரு வீரரை தேசிய அணிக்குள் விளையாட வைக்க ஒரு பிரான்சைஸ் நிர்வாகத்திடம் அனுமதி கோரும் நிலையை நான் தற்போதே நினைத்து பார்க்கிறேன். இப்படிப்பட்ட சூழலை கால்பந்து போன்ற மற்ற விளையாட்டுகளில் பார்த்திருப்பீர்கள். அங்கு ஒரு லீக் நிர்வாகத்தால் முழு ஒப்பந்தம் போடப்படும் ஒரு வீரர், நாட்டுக்காக விளையாட செல்லவேண்டுமென்றாலும் அந்த நிர்வாகத்திடம் அனுமதியை பெறவேண்டும். தற்போது கிரிக்கெட்டும் கால்பந்து அணுகுமுறைக்கு மாறிவருகிறது.

நாட்டுக்காக நல்ல வீரர்களை விளையாட எடுத்து வருவது கடினமானதாக மாறும்!

நாடுக்காக கோப்பை வென்று கொடுக்கும் வீரர்கள், அணிக்காக தொடர்ந்து அப்படிப்பட்ட வெற்றிகளை பெற்றுத்தரவேண்டும் என்று விரும்புகிறேன். அதிக திறமை வாய்ந்த வீரர்கள் மற்றும் அணிக்குள் விளையாடுவதற்கான போட்டிகள் அதிகமாக இருப்பதால் தான், இது போன்ற மாற்றங்கள் விரைவாக நடப்பதாக நினைக்கிறேன்.

Pat Cummins

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில், " எங்களுடைய சிறந்த வீரர்கள் அணிக்காக உலகக் கோப்பையை மட்டுமல்லாமல், பெரிய தொடர்களை வென்றுகொடுக்க வேண்டும் என்பதையும் அதிகமாக விரும்புகிறோம்" என்று கம்மின்ஸ் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால், சர்வதேச அணிக்காக சிறந்த வீரர்களை விளையாட எடுத்து வருவது கடினமான ஒன்றாக மாறும் என்று கம்மின்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.