Krunal Pandya Twitter
Cricket

க்ருனால் பாண்டியாவின் 'ரிட்டயர்டு ஹர்ட்' – சந்தேகம் கிளப்பும் அஸ்வின்.. விளாசி தள்ளிய நெட்டிசன்கள்!

Justindurai S

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரானப் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் வீரர் மார்க் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி 89 ரன்களை சேர்த்தார். 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசிய அவர் 8 சிக்ஸர்களையும் நான்கு பவுண்டர்களையும் அடித்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற கேப்டன் க்ருனால் பாண்டியா 42 பந்துகளை எதிர்கொண்டு 49 ரன்கள் சேர்த்தார்.

இறுதிக் கட்ட ஓவர்களில் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் லக்னோ அணி இருந்தது. அதனால், தான் காயம் அடைந்து விட்டதாக கூறி 'ரிட்டையர் ஹர்ட்' முறையில் திடீரென வெளியேறினார் க்ருனால் பாண்டியா. இன்னும் ஒரு ரன் எடுத்திருந்தால் அரை சதம் அடித்திருக்கலாம். ஆனால், அது குறித்து அவர் சற்றும் கவலைப்படாமல், வெளியே செல்வது என முடிவெடுத்து சென்றார். அதன்பிறகு நிக்கோலஸ் பூரன் களத்துக்கு வர, ஸ்டொயினஸ் அதிரடியாக விளையாடினார். அவரின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.

Krunal Pandya

க்ருனால் பாண்டியா ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறிய நிலையில், அதுகுறித்து ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். அதாவது, க்ருனால் பாண்டியாவுக்கு உண்மையிலேயே காயம் ஏற்பட்டு விட்டதா அல்லது அணி ரன் குவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் வெளியேறினாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Krunal Pandya

இந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்நிகழ்வை சுட்டிக்காட்டி, இது ரிட்டயர்டு ஹர்ட்டா இல்லை ரிட்டையர்டு அவுட்டா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் க்ருனால் பாண்டியா பொய் சொல்லிவிட்டு ரிட்டையர் ஹர்ட் ஆகியிருப்பதாக தெரிவித்ததற்கு பதில் அளித்த அஸ்வின், கிரிக்கெட்டில் விதிமுறைகள் அனுமதிப்பதால், அதனை தவறு என சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ரிட்டயர்டு அவுட் - ரிட்டயர்டு ஹர்ட் வித்தியாசம்

ரிட்டயர்டு அவுட் என்பது பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது ரன் குவிப்பில் தொய்வு ஏற்படும்போதோ அல்லது அடுத்த பேட்ஸ்மேனை களமிறக்க விரும்பினாலோ இந்த ரிட்டயர்ட் அவுட் என்ற விதிமுறையை பயன்படுத்தலாம். வழக்கமாக ரிட்டையர்ட் ஹர்ட் என்ற விதிமுறையை குறித்து கேள்விப்பட்டிருப்போம். அப்படி என்றால் ஒரு பேட்ஸ்மேன் காயத்தினால் அல்லது தனிப்பட்ட காரணத்தினால் ரிட்டையர்டு ஹர்ட் ஆகும்போது மீண்டும் விக்கெட் விழுந்த பின்னர் வந்து பேட்டிங் செய்யலாம். ஆனால் ரிட்டயர்ட் அவுட் என்கிற இந்த விதிமுறையை கையிலெடுக்கும் பேட்ஸ்மேன் மீண்டும் பேட்டிங் செய்ய வர முடியாது. அவர் ஆட்டமிழந்துவிட்டார் என்றே அர்த்தம்.