செய்தியாளர் - காமராஜ்
இயற்கை முறை விவசாயத்திலும் உணவிலும் மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான ஏழுமலையும்,பாலாஜியும் இயற்கை விவசாயம் செய்து கிடைக்கும் தானியங்களைக் கொண்டு, இயற்கை உணவு தயாரிப்பில் ஈடுபட்டு அசத்தி வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பினை தற்போது பார்க்கலாம்...
விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு கிராமத்தை சார்ந்த விவசாயியான ஏழுமலை என்பவர் விவசாயத்தின் மீதுள்ள அளவுகடந்த பற்றாலும், பூச்சி மருந்துகள் இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்காத பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து வழங்க வேண்டுமென்று தனக்குள் தோன்றியதன் விளைவாகவும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நெல்பயிர் விவசாயம் மட்டுமே செய்து வருகிறார்.
இதன் காரணமாக மாம்பழப்பட்டு கிராமத்தில் 2 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்த ஏழுமலை ஆரம்பத்தில் நெல் பயிர் நடவு செய்வது கடினமாக இருந்தாலும் போக போக இயற்கை முறையில் புண்ணாக்கு, வேப்ப எண்ணெய், இலுப்பை எண்னைய், பூச்சிவிரட்டி, மாட்டு சாணம், போன்றவைகளை மட்டுமே பயன்படுத்தி நெல் பயிருக்கு உரமாக பயன்படுத்தி விவசாயம் செய்து ஏக்கருக்கு 25 மூட்டைகள் வரை உற்பத்தி செய்து அசத்தி வருகிறார்.
தனது வயலில் பாரம்பரிய நெல்களான கருப்பு கவுனி, சிவன் சம்பா, சீரகசம்பா தூய மல்லி, பாஸ்மதி சொர்னமையூரி இலுப்பை பூ சம்பா, நெல்லையப்பர்,பூங்கார், கருங்குறுவை போன்ற நெல் வகைகளை மட்டுமே பயிர் செய்வதாகவும் நல்ல இடுபொருட்களை கொடுத்தால் இயற்கை விவசாயத்தில் அதிக லாபம் பார்க்கலாம் என்றும் இயற்கை முறை விவசாயத்தின் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 1 லட்சத்து 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுவதாக ஏழுமலை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.
பாரம்பரிய நெல் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமன்றி மண் வளம் பாதுகாக்கப்படுவதாகவும், தனது வயலில் பயிரிடப்படும் பூங்கார் அரிசி கிலோ 110 ரூபாய்க்கும், கருங்குறுவை ஒரு கிலோ 110 க்கும் சிவன் சம்பா கிலோ 130 க்கும் நெல்லையப்பர் கிலோ 90 க்கு விற்பனை செய்வதன் மூலம் அதிக அளவு லாபம் ஈட்ட முடிவதாகவும் நல்ல பராமரிப்பும், சரியான இடுப்பொருட்களும் இருந்தால், கண்டிப்பாக நல்ல மகசூல் ஈட்டி, லாபம் பார்க்க முடியும் ஏழுமலை தெரிவிக்கிறார்.
இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு வெளிநாடு, உள்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் மக்களிடையே இயற்கை முறை உணவு உட்கொள்ள வேண்டுமென்ற விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதாக ஏழுமலை கூறியுள்ளார்.
இயற்கை முறை விவசாயம் செய்யும் ஏழுமலைக்கு விவசாயத்தின் மீதுள்ள பற்றினை கண்ட அவரது நண்பர் பாலாஜி இயற்கை முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டுமென தனது நண்பனை பார்த்து தனக்குள் ஆர்வம் ஏற்பட்டு அதன் மூலம் ஏழுமலையிடம் கருப்பு கவுனி, சிவன் சம்பா, கருங்குறுவை போன்ற அரிசி வகைகளை பெற்று மதிப்புகூட்டப்பட்ட உணவு பொருட்களான கருங்குறுவை லட்டு, வெள்ளை கொழுக்கட்டை, கீரை அடை, சூப், அவுல் பாயாசம் போன்றவைகளை தயார் செய்து இருசக்கர வாகனத்திலையே ஒட்டம்பட்டு கிராமத்திலிருந்து கானைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவதன் மூலம் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் வரை ஈட்டுவதாகவும் மாதத்திற்கு 50 ஆயிரம் வரை இதன் மூலம் வருமான பெறுவதாக பாலாஜி பெருமிதம் தெரிவிக்கிறார்.
நல்ல நண்பன் கிடைத்தால் போதும் எதுவுமே சாத்தியமே என்பதற்கு உதாரணமாக திகழும் இவர்கள் இயற்கை விவசாயம் நான் செய்து தருகிறேன் நண்பா மதிப்புகூட்டப்பட்ட உணவாக மாற்றி லாபம் ஈட்டி கொள் என்று இருவரும் இயற்கை முறை விவசாயத்தில் லாபம் ஈட்டி வருகின்றனர்.