செய்தியாளர்: ஊ.விஜயகுமார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் பகுதிகளில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஒருமாத காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கூத்தாநல்லூர் அருகே வக்கிரநல்லூர், பூதமங்கலம், நீர்மங்கலம், பனகாட்டாங்குடி, வேளுக்குடி, தென்பாதி, சேகரை, சித்தன்னங்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரடி விதைப்பு மூலம் கடந்த 25 நாட்களுக்கு முன்பு சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சம்பா பயிர்களை இலைப்பேன் சாறுண்ணி, பூச்சி ஆகியவற்றிலிருந்து பாதுகாத்திடவும் செழிப்புடன் வளரவும் இயற்கை முறையில் விவசாயிகள் மருந்து தயாரித்து வருகின்றனர்.
இந்த மருந்தானது எருக்கன், நொச்சி, ஆடாதொடை, ஊமத்தங்காய், வேப்பிலை ஆகிய இலைகளைக் விவசாயிகளே தயாரித்துள்ளனர். மேலும் மீன் கழிவு மூலம் சர்க்கரை கலந்து நெற்பயிர்களில் தெளித்தால் நெற்பயிர்கள் செழிப்புடன் வளர்வதோடு மகசூலும் அதிகளவு கிடைக்கும் என்று கூறுகின்றனர்.
இந்த இரண்டு மருந்துகளையும் ஒன்றாக கலக்கி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும், நெற்பயிர்கள் செழிப்புடன் வளரவும் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து வருகின்றனர் விவசாயிகள். ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் ஏக்கருக்கு ஒரு லிட்டர் அளவு இந்த இயற்கை மருந்து போதுமானது. “ஏக்கருக்கு சுமார் ரூ.600 வரை மட்டுமே செலவாகிறது. மேலும் நேரமும் மிச்சமாகிறது. அதேபோல ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் ட்ரோன் மூலம் இயற்கை முறையில் மருந்துகளை தெளித்து வருகிறோம்” என விவசாயிகள் கூறினர்.