விவசாயத்தில் புது ரகம் pt desk
விவசாயம்

விவசாயத்தில் இது புது ரகம்... அடடே! இது நல்லா இருக்கே.. அசத்தும் ஈரோடு விவசாயி!

மாற்றங்கள் இல்லாமல் ஏற்றங்கள் ஏது? காலத்தின் ஓட்டத்தில் விவசாயமும் அப்படித்தான். இதில், வெர்டிகல் பார்மிங் எனும் பன்னடுக்கு விவசாயத்தை கையிலெடுத்து பலன் பெற்றிருக்கிறார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்....

webteam

பாரம்பரியத் தொழிலான விவசாயம் குறைந்த அளவே லாபம் தருகிறது என்ற நிலையை மாற்ற முடியும் என்கிறார் ஈரோடு மாவட்டம் சித்தோடையை சேர்ந்த விவசாயி சண்முகசுந்தரம். இடப்பற்றாக்குறை, தண்ணீர்பஞ்சம், ரசாயன உரம் இவற்றை தாண்டி இயற்கை முறையில் நல்ல மகசூலை பெற முடியும் என்கிறார் அவர். இதற்காக இவர் தேர்ந்தெடுத்த முறை, வெர்டிகல் பார்மிங் எனும் விவசாய முறை குறைந்த இடத்தில் அதிகமான செடிகளை வளர்த்து மனம் மகிழும்படியான மகசூலை கண்டுள்ளார் அவர்.

Farmer

ஒரு சதுரடியில் 16 செடிகளை வளர்க்க முடியும் என்பது வெர்டிக்கல் பார்மிங்கின் சிறப்பம்சங்களில் ஒன்று. தக்காளி, வெண்டை, கத்தரி கீரை, முள்ளங்கி, கேரட், கீரை, மிளகாய் என பல்வேறு செடிகளை இந்த முறையில் வளர்க்க முடிகிறது. சோலார் தகடுகளில் பயன்படுத்தப்படும் பாலி ஷீட்,பி.வி.சி பைப்,சொட்டு நீர் பாசன பைப் ஆகியற்றை கொண்டு இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் மண், கோகோபிட் மற்றும் மண்புழு உரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் நடப்படும் செடிகள் குறிப்பிட்ட காலத்திற்கு நர்சரியில் பராமரிக்கப்பட்டு, பின்னர் வெர்டிக்கல் பார்மிங் அமைப்பில் நடப்படுகிறது.

வெர்டிக்கல் பார்மிங் முறையை மாடியில், குறைந்த இடத்தில் மற்றும் ஒரு ஏக்கர் பரப்பளவில் என மூன்று விதமாக வடிவமைத்துள்ள சண்முகசுந்தரம் பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே இந்த முறையை செயல்படுத்த முடியும் என்கிறார். மேலும், இவற்றில் பயன்படுத்தப்படும் பாலி ஷீட்டை சுமார் இருபது ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறார். வேளாண் தொழிலில் ஆர்வம் உள்ள அனைவரையும் லாபம் ஈட்டும் விவசாயிகளாக மாற்ற வேண்டும் என்ற சண்முகசுந்தரத்தின் முயற்சி பெறும் வெற்றி பெறும் என நம்பலாம்...