விவசாயம்

திருவாரூர்: பருத்தி குவிண்டால் 8,300 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூர்: பருத்தி குவிண்டால் 8,300 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

kaleelrahman

திருவாரூரில் பருத்தி கொள்முதல் நிலையத்தில் குவிண்டால் 8,300 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்வதற்காக வாகனங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வறட்சியை தாங்கி வளரும் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் விளைந்த பருத்தியை விற்பனை செய்ய முடியாமல் பருத்தி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர்.

இன்றுவரை கொரோனா பரவல் நீடிப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைந்த அளவு பருத்தியை பயிரிட்டுள்ளனர். தற்போது பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் திருவாரூரில் உள்ள அரசு பருத்தி கொள்முதல் நிலையத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரத்து 300 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இதனால் பருத்தி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பருத்தியை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருவாரூரில் உள்ள அரசு நேரடி பருத்தி விற்பனை நிலையத்தில் அறுவடை செய்த பருத்தியை விற்பனை செய்வதற்காக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில், பருத்தி மூடைகளுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பருத்தியை விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பருத்தி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.