செய்தியாளர்: மகேஸ்
பாரம்பரிய காய்கனிகளை பயிரிட்டு வந்த திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் கவனம் இப்போது டிராகன் பழம், நன்னாரி போன்றவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில் தண்டராம்பட்டு அடுத்த இளையான்கன்னி கிராமத்தை சேர்ந்த விவசாயி டோமினிக் சேவியோ என்பவர் தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவில் தைவான் கிங் கெட் டிராகன் பழம் சாகுபடி செய்து வருகிறார்.
தமக்கு செந்தமான 8 ஏக்கர் விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் டிராகன் செடிகளை வளர்த்து லாபம் ஈட்டி வருகிறார். பெரும்பாலும் இந்த வகையான பழங்கள் வெளிநாடுகள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த டிராகன் பழத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக விவசாயி சேவியோ தனது ஒரு ஏக்கரில் பயிரிட்டு அதனை பராமரித்து வருகிறார்.
ஏக்கருக்கு குறைந்தது 8 லட்சம் வரை செலவாகும் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் இதனை நட்டு பராமரிக்க முன்வருவதில்லை. டிராகன் பழம் சாகுபடி செய்வதற்கு மிக முக்கியமாக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி அதனை பராமரிப்பதும் முக்கியமாகும். இந்த பழத்தின் சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
டிராகன் பழம் வளர்ப்பதற்கு அரசு மானியம் வழங்க முன்வர வேண்டும் என்றும், டிராகன் பழங்களை கொள்முதல் செய்வதற்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.