தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் 30 ஏக்கரில் இயற்கை முறையில் பல வகை பழ சாகுபடி செய்து அசத்தும் விவசாய தம்பதியினர், மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரனமாகி உள்ளனர். இயற்கை முறையில் பழ மரங்கள் உருவாக்கி, அதன்மூலம் வனத்தை உருவாக்கி நிறைவான லாபம் பெறும் இத்தம்பதியினரின் அந்த வனத்துக்கு நாமும் ஒரு விசிட் அடித்தோம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருமெய்ஞானம் கிராமத்தை சேர்ந்த சுப்பையன் - அமுதா தம்பதியினர் இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இந்த வயதான தம்பதியினர் திருமெய்ஞானம் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலத்தில் பல்வேறு பழ மரங்கள் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். அதில் 15 ஏக்கரில் பல வகை மா மரங்கள் சாகுபடி, 5 ஏக்கரில் சப்போட்டா சாகுபடி, மற்றும் வாட்டர் ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, நெல்லி, மாதுளை உள்ளிட்ட பல வகை பழ சாகுபடி செய்து அசத்தி வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை உரங்கள் பயன்படுத்தி இந்த பழ வகை சாகுபடி செய்து நிறைவான லாபம் ஈட்டி வருகின்றனர். தற்போது 15 ஏக்கரில் மா மரங்கள் காய்த்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. சுப்பையன்-அமுதா தம்பதியினரிடம் அவர்கள் இந்த குட்டி வனம் குறித்து பேசினோம். அப்போது பேசிய அவர்கள், “மேலும் 5 ஏக்ரில் சப்போட்டா மரங்கள் பழங்களுடன் தயாராகி அறுவடை நடைபெறுகிறது. கோடைக்காலம் என்பதால் சப்போட்டா பழம் அதிக அளவில் விற்பனையாகிறது. உள்ளூர் மட்டுமின்றி கடலூர், பன்ரூட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
சப்போட்டா சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 5 டன் பழங்கள் ஆண்டுக்கு சுழற்சி முறையில் அறுவடை செய்கிறோம். இதனால் நல்ல லாபம் கிடைப்பதால் இந்த பகுதியிலேயே அதிக பரப்பில் சப்போட்டா சாகுபடி செய்துள்ளோம். அது மட்டுமின்றி மேலும் பல வகை பழங்களையும் பலர் ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கின்றனர்.
மலை பிரதேசங்களில் விளையக்கூடிய வாட்டர் ஆப்பிளையும் பயிரிட்டு அறுவடை செய்கின்றனர். முதலில் சொட்டுநீர் பாசனம் மூலமும் தற்போது நிலத்தடி நீர் மூலம் சாகுபடி நடைபெறுகிறது. எங்களுக்கு வயதானாலும் கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் கடுமையான உழைப்பால் தற்போது பல வகை பழ மரங்களை உருவாக்கினோம். அதன் பலனைதான் இன்று அடைந்திருக்கிறோம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்தி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுப்பு