விவசாயம்

தஞ்சை: கொள்முதல் நிலையம் திறக்காததால் தேங்கிய 5000 நெல் மூட்டைகள் .. தவிக்கும் விவசாயிகள்

தஞ்சை: கொள்முதல் நிலையம் திறக்காததால் தேங்கிய 5000 நெல் மூட்டைகள் .. தவிக்கும் விவசாயிகள்

kaleelrahman

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், சுமார் 5000 நெல் மூட்டைகள் தேக்கம் ஆனதால், தங்களுடைய மகளின் திருமண செலவுக்கு பணமில்லாமல் பரிதவிக்கும் விவசாய தம்பதியினர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இலக்கை தாண்டி 3 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பருவம் தவறி பெய்த கனமழையால் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வீணானது. மீதமுள்ள பயிர்களை விவசாயிகள் காயவைத்து தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மழையிலும் இயற்கை இடர்பாடுகளிலும் இருந்து காப்பாற்றிய நெல்லை, அறுவடை செய்து தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்ய நினைத்தனர். அப்படி சென்றபோது, கொள்முதல் நிலையம் திறக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல்வேறு இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்காமல் இருப்பதால், 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் காத்து இருக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது கூறப்படுகிறது.

இதேபோல் தஞ்சாவூர் அருகே கரந்தை பூக்குளம் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், வடக்குவாசல், வலம்புரி, பள்ளியஹ்ரஹாரம், உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 5000 நெல் மூட்டைகள் தேங்கி உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் அறுவடை செய்து கொண்டு வந்த நெல்லுடன் 20 நாட்களுக்கு மேலாக காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஒரு நாளைக்கு கூடுதலாக ரூ.500 வரை கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மழையிலிருந்து உயிரைக் கொடுத்து காப்பாற்றி நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்ய முடியாமலும், மேற்கொண்டு செலவு செய்து கொண்டு நெல்லை காவல் காத்து வருவதாகவும், இன்னும் 5 நாட்களே தங்களின் மகளுக்கு திருமணத்தை வைத்துக் கொண்டு அழைப்பிதழ் கொடுக்க முடியாமலும். திருமணத்திற்கு கையில் பணம் இல்லாமல் திண்டாடடுவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றார். 

எனவே தமிழக அரசு உடனடியாக கூடுதல் நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் மிகாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் விவசாயிகள். இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் பெரியகோட்டை பகுதியில் நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் செய்யபப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். கரந்தை பூக்களும் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் காத்திருக்கும் தம்பதியினர் வரும் 25-ஆம் தேதி தங்கள் மகளுக்கு திருமணம் வைத்துள்ள நிலையில் இன்னமும் நெல்மணிகளை விற்பனை செய்ய முடியாததால் வேறு ஒரு இடத்திற்கு மூட்டை கட்டி எடுத்துச் செல்லக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.