விவசாயம்

மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி

Veeramani

பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்ற உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழாவில் இரண்டாவது நாளாக தேசிய உணவுத் திருவிழா நடைபெற்றது. மறைந்த நம்மாழ்வார் கடந்த 2007ஆம் ஆண்டு இந்த பாரம்பரிய நெல் திருவிழாவை தொடங்கி வைத்தார். அதனை முன்னெடுத்து நடத்தி வந்தவர் மறைந்த நெல் ஜெயராமன் ஆவார். தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்துவந்த, மறைந்துபோன நெல் ரகங்களை மீட்பதை இந்த நெல் திருவிழா நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.



இதன்படி 16வது ஆண்டு தேசிய நெல் திருவிழா நேற்று தொடங்கியது. 2வது நாளான இன்று பாரம்பரிய அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு திருவிழா காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உணவு திருவிழாவில் பாரம்பரிய விவசாயிகள் மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, காட்டுயானம், யானைக்கவுனி, சீரக சம்பா, கிச்சலி சம்பா, கருடன் சம்பா, தூயமல்லி முதலான பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்களில் இருந்து எடுக்கப்பட்ட அரிசியினை கொண்டு கொழுக்கட்டை, கம்பு கூழ், அவலில் இருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு சுவையான உணவு வகைகளை தயாரித்து விழாவில் காட்சி படுத்தினர். இதனை விவசாயிகள், பொதுமக்கள் பார்வையிட்டு பாரம்பரிய உணவுவகைகளை உண்டு அதன் சிறப்பினை அறிந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு நெல் ஜெயராமன் மற்றும் நம்மாழ்வார் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாரம்பரிய நெல் ரகங்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் அதன் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இரண்டு கிலோ பாரம்பரிய நெல் விதைகளை வழங்கும் நிகழ்வை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.


 
தொடர்ந்து விவசாயிகளிடம் உரையாடிய பொது பேசிய உணவு மற்றும் குடிமை பொருள், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாட்டு துறை அமைச்சர் சக்கரபாணி, "24 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் தண்ணீர் திறந்து வைக்க இருக்கிறார். கடந்த ஆட்சியில் நெல் கொள்முதல் அக்டோபர் மாதத்தில் நடைபெற்று வந்த நிலையில், மழை காலத்துக்கு முன்பாகவே நெல் கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. செப்டம்பர் மாதம் இறுதி வரை சம்பா நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  தமிழக முதல்வர் பதவி ஏற்ற பின்பு 12 ஆண்டுகளுக்கு பின் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்த்தியிருக்கிறார். பொது ரகத்திற்கு 75 ரூபாய் உயர்த்தி கொடுத்து இருக்கிறார்.

சேலம் மாம்பழம், பழனி பஞ்சாமிர்தம், திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க முதலமைச்சரின் கவனத்தை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பாரம்பரிய நெல் ரகங்களை அமுதம் அங்காடி, பாண்டியன் அங்காடி போன்ற சிறப்பு அங்காடிகளில்  விற்பனை செய்வதற்கு முதலமைச்சரின் கவனத்தை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.