300 விவசாயிகள் உயிர் இழந்தும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் இதுவரை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு ரூ.814 கோடி இழப்பு என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் சூழ்நிலையில் மறுபுறம் குளிர்காலத்தை நிறைவு செய்துவிட்டு வெயில் காலத்திற்கு நுழைந்திருக்கிறது டெல்லியில் முக்கிய எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளின் போராட்டம். கடந்த ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் இருந்து "டெல்லி சலோ" என நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் பேரணியை டெல்லிக்குள் நுழையாதவாறு ஹரியானா மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதன் காரணமாக விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடுப்பு வேலிகள் தகர்த்தெறியப்பட்டு விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்மீது தடியடி நடத்திய காவல்துறையினர் அவர்களை டெல்லிக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்தினர். விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக அவர்கள் டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதேநேரத்தில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல மாநிலங்களிலிருந்து தலைநகரை நோக்கி படையெடுக்க தொடங்கியதால் பெரும்பாலான விவசாயிகள் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து அவர்கள் டெல்லி - உத்தரப்பிரதேசம் எல்லையான காசிப்பூர், பஞ்சாப் - ஹரியானா எல்லையான டிக்ரி, சிங்கு பல இடங்களில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆரம்ப காலக்கட்டத்தில் அமைதியாக சென்ற இவர்களுடைய போராட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகியது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இவர்களுடைய போராட்டத்திற்கு நிதி உதவிசெய்து தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஆனால் அதே நேரத்தில் கடந்த ஜனவரி 26-ஆம் தேதியன்று குடியரசு நாளில் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளில் சிலர் செங்கோட்டையில் நுழைந்தனர். இதனால் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். காவல்துறையினரின் வாகனங்களும் சூறையாடப்பட்டன.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் உடனடியாக பஞ்சாப் மாநிலத்திற்கு திரும்பவேண்டும் என மாநில முதல்வர் வலியுறுத்தினார். அதேபோன்று டெல்லி எல்லையில் போராடிவரும் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், தங்களுடைய ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டு அவரவர் ஊர்களுக்கு மீண்டும் திரும்பினார். இது போராட்டக் குழுவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகவும், போராட்டத்தை தூண்டியதாகவும் பல நபர்களை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாயிகள் போராடிவரும் மூன்று எல்லைகளில் முழுமையாக தடுப்பு வேலிகளை அமைத்து, இணையதள சேவையை துண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்கள் உடனடியாக தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு திரும்பவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிய நிலையில், சில விவசாயிகள் மட்டும் எல்லைப்பகுதிகளில் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். அதேநேரத்தில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மகா பஞ்சாயத்துகள் நடைபெற்றது.
மத்திய அரசுடன் கிட்டத்தட்ட 11 கட்ட பேச்சுவார்த்தை இதுவரை நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதிவரை எங்களுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள விவசாயிகள் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க மாநிலம் வாரியாக களமிறங்கியுள்ளனர்.
இதுகுறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் கட்கரி முன்வைத்த ஒரு புள்ளி விவரத்தில் கூறும்போது, டெல்லியில் துவங்கிய விவசாயிகள் போராட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகள் திறந்துவிடப்பட்டன. இதனால், அரசிற்கு கடந்த மார்ச் 16 வரையிலும் ரூ.814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டும் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக பஞ்சாபில் ரூ.487 கோடி இழப்பாகி உள்ளது. ஹரியானாவில் ரூ.326 கோடியும், ராஜஸ்தானில் ரூ.1.04 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதுபோல், எந்தவித இழப்பும் சுங்கச்சாவடிகளில் ஏற்படவில்லை. எனவே பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில அரசுகளிடம் அச்சாவடிகளை மீண்டும் அமைக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளளதாக கட்கரி தெரிவித்தார்.
- விக்னேஷ்முத்து