புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய வந்த மத்திய முழுவினர் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர் ஆகிய பகுதிகளை புறக்கணித்துச் சென்றதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் அஷதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழு வருகை தந்தது.
முதலில் சென்னை வேளச்சேரி பகுதியில் ஆய்வைத் தொடங்கிய குழு, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, முடிச்சூர் என ஆய்வை நடத்தி, பின்பு செங்கல்பட்டு, வேலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்குச் சென்றனர். ஆனால் பெரும்பாலான பகுதிகளில் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லாமல் முகாம்களில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை மட்டும் பார்த்து ஆராய்ந்துவிட்டுச் சென்றதாகவும், நிலங்களை நேரடியாக பார்வையிடவில்லை என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
இன்றும் மத்திய முழுவினர் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர் ஆகிய பகுதிகளை புறக்கணித்துச் சென்றதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தின் மேற்கு பகுதியான ஆற்காடு, வாலாஜா பேட்டை உள்ளிட்ட இரண்டு வட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆனால் கிழக்குப் பகுதியான அரக்கோணம், நெமிலி ஆகிய முக்கிய நகரங்களை அதிகாரிகள் புறக்கணித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கு மழையால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறும் விவசாயிகள் மாவட்டத்தில் 6 வட்டங்களில் 2 வட்டங்களில் மட்டும் ஆய்வு மேற்கொண்டு சென்றதாக குற்றம்சாட்டியுள்ளனர்.