விவசாயம்

புதுக்கோட்டை: விளைச்சல் இருந்தும் விலையில்லாத பூக்கள் – கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்

புதுக்கோட்டை: விளைச்சல் இருந்தும் விலையில்லாத பூக்கள் – கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டத்தில் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ள விவசாயிகள் செடிகளில் இருந்து பூக்களை பறிக்காமல் விட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரு, ஆதனக்கோட்டை, செட்டியாபட்டி, மாஞ்சான்விடுதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலர் சாகுபடியும் ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக விளைந்த பூக்களை விற்க முடியாமலும் பூக்களுக்கு உரிய விலை இல்லாததாலும் மலர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து கலாசாரம் சார்ந்த விழாக்களுக்கு அரசு அனுமதி அளித்ததோடு கோயில் திருவிழாக்களும் நடைபெறத் தொடங்கியதால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பூக்களின் விலை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் புதுக்கோட்டை மாவட்டம் மலர் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். குறிப்பாக இப்பகுதியில் அதிகம் விளையும் சென்டி பூக்களின் விலை தற்போது கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை மட்டுமே விற்பதால் அதனை பறிக்கும் செலவு கூட கிடைக்காததால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்துள்ள விவசாயிகள் விளைந்த பூக்களை பறிக்காமல் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர். தொடர்ந்து இரண்டு ஆண்டுக்கு மேலாக கடும் பாதிப்பை சந்தித்து வரும் மலர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முறையான ஏற்றுமதி வசதி மற்றும் நிர்ணய விலை கிடைக்கவும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நறுமண தொழிற்சாலை வசதி அமைத்துக் கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலர் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.