திடீர் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
உலகுக்கே உணவிடும் விவசாயிகள், ஒருபடி நெல்லைக்கூட வயலில் இருந்து எடுக்கமுடியாமல் போன சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை காணாத அளவுக்கு அறுவடை நேரத்தில் தொடர் கனமழையை எதிர்கொண்டு பெரும் சேதத்தை சந்தித்துள்ளனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு நல்ல பருவமழை பெய்ததாலும், மேட்டூர் அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் திறக்கப்பட்டதாலும் சுமார் 2.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாராக இருந்த விவசாயிகளுக்கு கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை கண்ணீராக மாறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் சுமார் 60 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் என்ன செய்வதென்றே தெரியாமல் அம்மாவட்ட விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியுடன் ஆய்வு செய்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 74 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு முதல் கட்டமாக 700 கோடி ரூபாய் நிலம் கையகப்படுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாகை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய கிராமங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 10 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி மீண்டும் முளைத்தன. இதனால் புத்தரிசிக்கும், விதைநெல்லுக்கும் வழியில்லை என்று கடைமடை விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள்.
புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலை கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் நெற்கதிர்களால் கடைமடை விவசாயிகளின் வாழ்வே மூழ்கி போயிருக்கிற நிலையில் புத்தரிசிக்கு எங்கே போவது?
திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்க்குப்பை, கரம்பை, வேலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மட்டும் 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெற்கதிர்கள் அனைத்தும் மழை நீரால் அழுகி வருவதுடன் முளைத்தும் வீணாகிவிட்டன. கதிர் அறுக்கலாம், அறுவடை முடிந்து புத்தரிசியில் பொங்கல் கொண்டாடலாம் என்று எண்ணியிருந்த கடைமடை விவசாயிகளுக்கு ரேசன் கடைகளில் தமிழக அரசு வழங்கிய அரிசி மட்டுமே பொங்கலுக்கு கையிலிருக்கிறது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.
விளை நிலங்களின் நிலையைக் கண்டு தண்ணீரை கட்டுப்படுத்த மட்டுமல்ல கடைமடை விவசாயிகளின் கண்ணீரை கட்டுப்படுத்தவும் அணை தேவைதான்.
தஞ்சை
தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஒரத்தநாடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்ட கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக பெய்துவரும் கனமழையால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அம்மாபேட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தநிலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் அளவிலான நெற்பயிர்களும், 500 ஏக்கர் பரப்பளவிலான மானாவாரி பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாக வேளாண்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இடைவிடாத மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து முளைக்கத் தொடங்கிவிட்டன. பயிர்கள் மழைநீரில் அழுகியதால் மகசூல் பாதியாக குறைந்துவிடும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆகவே, வீணான பயிர்கள் குறித்து கணக்கிட்டு அரசு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனை சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றுக்கு கோடை உழவுக்கு ₹3 ஆயிரம், தொழு உரம் போட ₹3 ஆயிரம், விதை நெல்லுக்கு ₹1 ஆயிரம், உரம் உள்ளிட்ட நாற்றங்கால் பராமரிப்புக்கு செலவு ₹1 ஆயிரம், நடவு நேர உழவுக்கு ₹5 ஆயிரம், நடவு கூலி ₹5 ஆயிரம், அடிஉரம், மேல்உரம் மற்றும் பூச்சிமருந்து செலவு ₹7 ஆயிரம், உரம் தெளிக்க கூலி மற்றும் களையெடுக்க கூலி ₹5ஆயிரம், அறுவடை கூலி ₹3 ஆயிரம், இரண்டு நடை டிப்பர் லாரி வாடகை ₹1ஆயிரம், தண்ணீர் பாச்ச ₹1ஆயிரம், 40 சணல் சாக்கு ₹3 ஆயிரம் என சுமார் ₹38 ஆயிரம் செலவு செய்கிறார்கள். நெல் நன்கு விளைந்தால் 60 கிலோ எடையுள்ள 40 மூட்டைகள் நெல் கிடைக்கும். இந்த மூட்டை ஒன்றை ₹700 முதல் ₹1200 வரை விற்பனை செய்ய விவசாயிகள் போராட வேண்டியுள்ளது.
அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோ மோட்டா ரக நெல்லுக்கு மத்திய அரசு 18 ரூபாய் 38 பைசாவும், மாநில அரசு 70 பைசாவும் வழங்குகிறது. அதேபோல ஒரு கிலோ சன்ன ரக நெல்லுக்கு மத்திய அரசு 18 ரூபாய் 88 பைசாவும், மாநில அரசு 70 பைசாவும் வழங்குகிறது. இதில் 17 விழுக்காட்டிற்கு மேல் நெல் ஈரப்பதத்துடன் இருந்தால், அதனை அரசு கொள்முதல் செய்யாது. அதற்கு குறைவான ஈரப்பதத்துடன் நெல் இருந்தால் அதனை மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது.
தற்போது தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் பயிர்கள் நீரில் சாய்ந்து முளைக்கத் தொடங்கிவிட்டன. பயிர்கள் தண்ணீரில் அழுகியதால் மகசூல் பாதியாக குறைய வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக கணக்கிட்டு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முதல்வர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். நிவர் மற்றும் புரெவி புயலிலிருந்து தப்பிய விளை நிலங்கள், அண்மையில் பெய்த பெருமழையால் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின. இதனை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வுசெய்த நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மற்றும் அதிகாரிகள் வயலில் இறங்கி ஆய்வு நடத்தினர். பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று விவசாயிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு முடித்த பின்னர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்.