விவசாயம்

பருவகால மாற்றத்தால் முன்கூட்டியே விளைந்த மிளகு..!

பருவகால மாற்றத்தால் முன்கூட்டியே விளைந்த மிளகு..!

Rasus

பருவகால மாற்றத்தால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பே மிளகு முழு விளைச்சலுக்கு வந்துள்ளது.

உலகின் மிளகு தேவையை 34 சதவீதம் வியட்நாமும், மீதியை இந்தியாவும் பூர்த்தி செய்கின்றன. இந்தியாவின் மொத்த மிளகு உற்பத்தியில் கேரளா முதலிடம் வகிக்கிறது.  நாட்டின் 95 சதவீத மிளகு உற்பத்தி கேரளாவில் மட்டும் நடக்கிறது. அதிலும் கேரளாவின் மிளகு உற்பத்தியில் 85 சதவீதம் இடுக்கி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.

இடுக்கி மாவட்டத்தில் 35,000 ஹெக்டேர் பரப்பில் மிளகு பயிரிடப்பட்டு உள்ளது. மாவட்டத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பில் 25 சதவீதம் முழுக்க முழுக்க மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டின் மார்ச் மாதம் முதல் மிளகு வரத்து ஆரம்பிக்கும். ஆனால் கேரளாவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்து, பருகாலங்கங்களில் மாற்றம் ஏற்பட்டதால், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தற்போது மிளகு முழு விளைச்சலை அடைந்துள்ளது. சில இடங்களில் மிளகு பறிக்கும் பணியும் துவங்கியுள்ளது. எனவே, இன்னும் ஒரு மாதத்தில் மிளகுவரத்து அதிகரிக்கும் எனவும், மிளகு விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குமுளி, தேக்கடி உள்ளிட்ட இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஒரு கிலோ மிளகு 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விலை போகிறது.