விவசாயம்

நிவர் புயல் எதிரொலி: பயிர்க்காப்பீடு செய்ய கணினி மையங்களில் குவிந்த டெல்டா விவசாயிகள்

நிவர் புயல் எதிரொலி: பயிர்க்காப்பீடு செய்ய கணினி மையங்களில் குவிந்த டெல்டா விவசாயிகள்

Veeramani

டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற் பயிருக்கு இணைய தளத்தின் வழியாக பயிர்க் காப்பீடு செய்வதற்காக கணினி மையங்களில் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில்  கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டில் அதிக பரப்பில் குறுவை சாகுபடியும், அதிக நெல் கொள்முதலும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பா சாகுபடியை உற்சாகத்தோடு விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். சம்பா நெற் பயிருக்கான காப்பீடு செய்ய காலக்கெடு இருந்தாலும் நிவர் புயல் பாதிப்பையும் கணக்கில் கொண்டு, இன்றே கடைசிநாள் என்று கருதி காப்பீடு செய்ய விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர்.  இதனால் விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து, டோக்கன் பெற்றுக் கொண்டு காப்பீட்டிற்கான பிரிமியம் செலுத்தி வருகின்றனர்.

சாகுபடி நிலத்தின் ஆவணம் (சிட்டா அடங்கல்), வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் உள்ளிட்ட விபரங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கும் கடன் பெறாதவர்களுக்கு இணைய தளம் மூலம் (ஆன் லைனில்) காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பெரும்பாலானவர்கள் கணினி மையங்களை நோக்கி சென்றனர். அங்கும் அதிக கூட்டம், சர்வர் கோளாறு என பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.