ஓசூரில் பனிக்காலங்களில் மலர்ச் செடிகள் வளர எல்இடி மின் விளக்குகளை பயன்படுத்தி புதிய யுக்தியை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.
தகுந்த சீதோசன நிலை நிலவி வருவதால் ஓசூர் பகுதி விவசாயிகள் ரோஜா மலர்கள் மட்டுமின்றி செண்டுமல்லி, சாமந்தி போன்ற பல்வேறு வகையான மலர்களை நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓசூர் அருகே உள்ள மத்தம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா ரெட்டி என்ற விவசாயி தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சாமந்தி பூ செடி நடவு செய்துள்ளார். இந்த தோட்டத்திற்கு தனியாக மின்சாரம் பெற்று 400-க்கும் மேற்பட்ட எல்இடி விளக்குகளை எரிய விட்டுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, ''பனிக்காலத்தில் செடிகள் நன்கு வளர்ச்சி பெறாது. எனவே இந்த லைட்டை எரியவிட்டால் செடிகளை நோய் தாக்குவது குறைவாக இருக்கும். அதேசமயம் செடி நன்றாக வளர்ந்து பூ மொட்டுகளும் கருகாமல் பெரிய அளவிலான பூ மலரும்'' என்றார்.
இந்த லைட்டை 25 முதல் 30 நாட்கள் மட்டுமே பயன்படுத்துவதாக தெரிவித்த விவசாயி, அதன் பின்னர் அடுத்த தோட்டத்திற்கு மாற்றம் செய்து விடுவோம். இதனால் நல்ல பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்