விவசாயம்

நாமக்கல்: தர்பூசணி நடவு பணியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்...!

நாமக்கல்: தர்பூசணி நடவு பணியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்...!

kaleelrahman

நாமக்கல் மாவட்டத்தில் தர்பூசணி நடவு பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 550 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட சற்று கூடுதலாகும். இதனால் கிணறு மற்றும் போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மோகனூர், வளையப்பட்டி, ஆண்டாபுரம், புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.


இப்பகுதியில் 200 ஏக்கர் அளவிற்கு தர்பூசணி நடவு நடைபெற்று வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.70 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில் இந்த ஆண்டு பருவமழையும் சரியான தருணத்தில் பெய்து வரும் நிலையில் விளைச்சலும் நன்றாக இருக்கும் எனவும் ஒரு ஏக்கரில் 12 டன் வரை விளைச்சல் கிடைக்கும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


இதற்கு இயற்கை உரமான கடலைப் புண்ணாக்கை கொண்டு தர்பூசணி விளைவிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தங்களிடம் இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தோடு சொட்டுநீர் பாசனம் அமைத்து விளைச்சலை பெருக்கி வருகின்றனர். நடவு பணியின் போது 13 நாட்கள் விதைகளை பதியம் போட்டு நாற்று வந்த பிறகு அந்த நாற்றங்காலை எடுத்து தங்களது வயலில் நடுகின்றனர். நாற்று நட்ட 50 நாட்கள் கழித்து தர்பூசணி அறுவடைக்கு தயாராகும்.


விளைச்சலின்போது காய்கள் சேதமாகாமல் இருக்க படுதாவை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு கிலோ ஒரு ரூபாய் 50 காசுக்கு விற்பனை ஆனது. ஆண்டு முழுவதும் விளைச்சல் தரும் என்பதாலும் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதாலும் தர்பூசணி நடவு பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விலை போகும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் அதிகஅளவு நடவு பணியில் ஈடுபட்டு உள்ளனர். உள்ளூர் வியாபாரிகள் லாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு தர்பூசணியை அனுப்பி வருகின்றனர்.


கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை வருகின்ற நாட்களில் ஈடுசெய்யும் விதமாக விவசாயிகள் அதிகளவு தர்பூசணியை நடவு செய்து வருகின்றனர்.