வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிர்கள், கடந்த நான்கு நாட்கள் பெய்த கனமழையால் தண்ணீரில் முழ்கியுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாரத்தில் கடந்த நான்கு நாட்கள் பெய்த கனமழையில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தும் முழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை சீராக பெய்து பயிர்கள் நன்றாக விளைந்து பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் விளைச்சல் அதிகமாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
இந்த நிலையில் வேதாரண்யம் மானாவரி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் ஆதனூர், பஞ்சநதிக்குளம், மருதூர், தாணிக்கோட்டம், வடமழை, மணக்காடு, கரியாப்பட்டினம் போன்ற கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கீழே சாய்ந்து மழைநீர் பயிர்களை சூழ்ந்துள்ளது. ஆதனூர் கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலக் கடலை சாகுபடி மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் நீரில் சாய்ந்து அழுகிய நிலையில் உள்ள நெற்பயிர்களை வேளாண்மைத்துறை மூலம் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.