விவசாயம்

மொட்டை மாடியில் அமோக காய்கறி விளைச்சல்... ஊரடங்கைச் சமாளித்த திருச்சி இல்லத்தரசி

மொட்டை மாடியில் அமோக காய்கறி விளைச்சல்... ஊரடங்கைச் சமாளித்த திருச்சி இல்லத்தரசி

webteam

திருச்சியில் வசிக்கும் முத்து நாகப்பன், தன் வீட்டு மொட்டை மாடியில் 500 சதுர அடியில் நூற்றுக்கும் அதிகமான பைகளில் 25 வகையான காய்கறிகளை வளர்த்து ஊரடங்கு காலத்தில் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கிறார். இந்த மாடித் தோட்டம் பற்றிய கட்டுரையை தபெட்டர் இந்தியா இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு முறை வீட்டு மாடிக்குச் செல்லும்போதெல்லாம் தன் பால்யகாலத்துக்குச் சென்றுவிடுகிறார் முத்து. காய்கறிச் செடிகளில் தவழ்ந்துவரும் அந்த நறுமணம்தான் அதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த ஈர மண்ணின் வாசமும் பசுமையும் அவரை முப்பது ஆண்டுகளுக்குப் பின்னே நகர்த்துகின்றன.

இந்த இல்லத்தரசியின் காலை நேரங்கள் மாடி தோட்டத்தில்தான் தொடங்குகின்றன. கத்தரிக்காய், வெண்டைக்காய், கீரைகளுக்கு நீர் ஊற்றுவதும், அதை சமையலுக்காகப் பறித்து வருவதாகவும் அவர் சுறுசுறுப்பாக இருக்கிறார். செடிகளை ஏதும் பூச்சி தாக்கியுள்ளதா என்றும் தினமும் கவனமாக கண்காணிக்கிறார்.

ஊரடங்கு காலத்தில் அவர் வளர்க்கும் காய்கறிகள் மிகப்பெரிய அளவில் வீட்டுக்குப் பயன்பட்டுள்ளன. ஒவ்வொரு காய்கறியும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கால் கிலோ கிடைத்துவிடும். அத்தனையும் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட பசுமையான காய்கறிகள். அதன் சுவையே தனிதான்.

"எங்கள் முழு குடும்பத்திற்கும் தேவையான 90 சதவீத காய்கறிகளை எங்கள் தோட்டம் தருகிறது. நாங்கள் எப்போதாவதுதான் காய்கறி வாங்குவதற்காக வெளியே செல்கிறோம். இது எங்களுக்கு அமைதியான பயனைத் தருகிறது" என்று ஆர்வத்துடன் பேசுகிறார் முத்து நாகப்பன்.

சென்னையில் இருந்து திருமணத்திற்குப் பிறகு திருச்சிக்கு வந்த முத்து நாகப்பன், ஆரம்பத்தில் மொட்டை மாடி தோட்டத்தை உருவாக்கி பலமுறை தோல்வியடைந்தார். பிறகு திருவெறும்பூரில் உள்ள ஒரு இயற்கை விவசாயப் பண்ணையின் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளின் விளைவாக இன்று மாடித் தோட்டத்தில் அவர் வெற்றிகண்டுள்ளார்.