விவசாயம்

குறைந்தபட்ச ஆதரவு விலை: உ.பி. வரலாற்றில் அதிகபட்ச கோதுமை, நெல் கொள்முதல்

குறைந்தபட்ச ஆதரவு விலை: உ.பி. வரலாற்றில் அதிகபட்ச கோதுமை, நெல் கொள்முதல்

Veeramani

உத்தரப் பிரதேச வரலாற்றில், அம்மாநில விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் அதிகபட்ச கோதுமை, நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'நடப்பு ராபி சந்தை பருவம் 2021-22-ல் உத்தரப் பிரதேசத்தின் 12.98 லட்சம் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 56.41 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. உத்தரப் பிரதேச வரலாற்றில், இது அதிகபட்ச கொள்முதல். இதற்காக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.11,141.28 கோடி வழங்கப்பட்டது. ராபி சந்தை பருவம் 2020-21-ல் கொள்முதல் 58 சதவீதம் அதிகரித்துள்ளது. 6.64 லட்சம் விவசாயிகளிடமிருந்து 35.77 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் 2020-21 காரீப் சந்தைப் பருவத்திலும், நெல் கொள்முதலில் சாதனை படைக்கப்பட்டது. 66.84 லட்சம் மெட்ரிக் டன்கள் நெல், 10.22 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. உத்தரப் பிரதேச வரலாற்றில், இது அதிக அளவிலான நெல் கொள்முதல். இதற்காக உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு ரூ.12,491.88 கோடி செலுத்தப்பட்டது.

நடப்பு ராபி சந்தை கொள்முதலில், சுமார் 49.16 லட்சம் விவசாயிகள், ரூ.85,581.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்று ஏற்கனவே பயனடைந்துள்ளனர். நடப்பு காரிப் சந்தை பருவ கொள்முதலில், சுமார் 127.72 லட்சம் விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.1,63,510.77 கோடி பெற்று ஏற்கெனவே பயனடைந்துள்ளனர்.

நெல் கொள்முதல், 2019-20 ஆண்டு காரிப் சந்தை பருவத்தின் மிக அதிக அளவான 773.45 லட்சம் மெட்ரிக் டன் அளவை கடந்து இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.