விவசாயம்

மேட்டூர் அணை திறப்பு: திருவாரூரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

மேட்டூர் அணை திறப்பு: திருவாரூரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

kaleelrahman

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளை வந்தடைந்ததால் திருவாரூரில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 85 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணியில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே ஆழ்துளை பம்பு செட் நீரை பயன்படுத்தி இந்த குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆறுகளில் தண்ணீர் வந்ததால் மீதம் உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கியுள்ளனர். 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.