விவசாயம்

மதுரை: கடனை கட்டாத ஏழை விவசாயியின் வீடு ஜப்தி... குடும்பத்துடன் தெருவில் வசிக்கும் அவலம்

மதுரை: கடனை கட்டாத ஏழை விவசாயியின் வீடு ஜப்தி... குடும்பத்துடன் தெருவில் வசிக்கும் அவலம்

kaleelrahman

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கு முன்னறிவிப்பின்றி வங்கி அதிகாரிகள் ஏழை விவசாயியின் வீட்டை ஜப்தி செய்ததால் விவசாயி குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமங்கலம் அருகே விருசங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (49). இவருடைய மனைவி ரோகிணி. இவர்களுக்கு சௌந்தர்யா (17), திவ்யா (4) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதில் சௌந்தர்யா அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பும், திவ்யா அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

விவசாய கூலி வேலை செய்து வரும் சதீஷ்குமார், கடந்த 2018ஆம் ஆண்டு கால்நடை வாங்குவதற்காக தனியார் வங்கியில் ரூபாய் 5 லட்சம் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை தொடர்ந்து ஒரு வருடங்கள் கட்டி வந்த நிலையில் திடீரென சதீஷ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனையடுத்து வாங்கிய ஏழு மாடுகளில் நான்கு மாடுகள் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டன. இதனால் வருவாய் இழந்த விவசாயி கடனை கட்ட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதற்கிடையே கொரோனா காலமென்பதால் கடந்த ஆண்டு முழுவதும் வருவாய் இன்றி வாங்கிய வங்கிக் கடனை கட்ட முடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், வங்கியிலிருந்து கடனை திருப்பி செலுத்தச் சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது. அந்த நேரத்தில் அவரால் பணத்தை செலுத்த முடியாததால் கடந்த 9ஆம் தேதி எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றுள்ளனர். பின்னர், சதீஷ்குமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு ஜப்தி செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில் வீட்டின் வெளியே தங்கியுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் வீட்டு முன்பே தன் குடும்பத்தோடு செய்வதறியாத நிலையில் உள்ளார். கடந்த ஒருவார காலமாக பள்ளி செல்ல முடியாமல் குழந்தைகள் பரிதவித்து வருவதும் வீடின்றி நடுவீதியில் அவதிப்பட்டு வருவதும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கு குழந்தைகள் பாதியில் படிப்பை நிறுத்தியதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆதலால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு விவசாயி பெற்ற கடனை ரத்து செய்து வாழ்வளிக்க வேண்டும் என்பதே சதீஷ்குமார் குடும்பத்தின் கோரிக்கையாக உள்ளது.