விவசாயம்

முடங்கிக் கிடக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 'கனவு திட்டம்' – கவலையில் விவசாயிகள்!

முடங்கிக் கிடக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 'கனவு திட்டம்' – கவலையில் விவசாயிகள்!

Veeramani

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத்திட்டமாக இருந்த குறுவை தொகுப்பு திட்டத்தை கைவிட்டுவிட்டது அதிமுக அரசு என்று கொந்தளிக்கின்றனர் விவசாயிகள். கொரோனா காரணமாக வங்கிகள் மூலமாகக்கூட கடன்பெற முடியாத இந்த சூழலில் இத்திட்டத்தையும் முடக்கிவைத்திருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 

விவசாயிகளின் துயரை போக்குவதற்காகவும், விவசாயிகள் குறுவை சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ளவும் 2013 ஆம் ஆண்டு சிறப்பு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த திட்டம் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற காரணத்தால், இதனை தனது கனவு திட்டமாக மாற்றி அவர் இறக்கும் வரை ஒவ்வொரு ஆண்டு விவசாயிகளுக்கு இந்த குறுவை தொகுப்பினை வழங்கிவந்தார். இந்த திட்டம் மூலமாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வந்தனர். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 2019 முதல் இந்த திட்டத்தை முடக்கிவைத்துள்ளார்.

 “2013 ஆம் ஆண்டுமுதல் குறுவை தொகுப்பு திட்டம் மூலமாக இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த 75 சதவீத மானியத்தில் தண்ணீர் கொண்டுசெல்லும் குழாய்கள், 100 சதவீத மானியத்தில் நுண்ணூட்ட கலவைகள், மானாவாரி விதைப்புக்கு ஏக்கருக்கு 1400 மானியம், 100 சதவீத மானியத்தில் பசுந்தாள் பயிர் விதைகள் போன்றவற்றை வழங்கும் சிறப்பான குறுவை தொகுப்பு திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.

இதனால் சுமார் 10 இலட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும், பல இலட்சம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களும் பயன்பெற்றனர். இப்போது இந்த திட்டம் முடக்கப்பட்டதால் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யமுடியாமல் தவிக்கின்றனர். மாண்புமிகு அம்மாவின் கனவு திட்டத்தை தற்போதைய முதல்வர் முடக்கி வைப்பது, அவரின் கனவை சிதைக்கும் செயல். எனவே உடனடியாக குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்கவேண்டும்” என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர. விமல்நாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.