விவசாயம்

கிருஷ்ணகிரி: விளைச்சல் இருந்தும் விலை இல்லை - கவலையில் முள்ளங்கி விவசாயிகள்

கிருஷ்ணகிரி: விளைச்சல் இருந்தும் விலை இல்லை - கவலையில் முள்ளங்கி விவசாயிகள்

kaleelrahman

கிருஷ்ணகிரியில் முள்ளங்கி விளைச்சல் அதிகரித்த போதும் விலை குறைந்துள்ளது. ஒரு டன் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்தள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊட்டிக்கு அடுத்தபடியாக காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முள்ளங்கி மற்றும் புதினா கொத்தமல்லி ஆகியவற்றை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி அடுத்துள்ள தின்னகழனி கிராமத்தில் அதிகளவில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். குறைந்த நாளில் அதிகம் லாபம் தரும் என்பதால் விவசாயிகள், முள்ளங்கி சாகுபடி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்பார்த்தவாறு முள்ளங்கி அதிகளவில் மகசூல் கிடைத்து தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உரிய விலை இல்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ. 30 ஆயிரம் செலவு செய்து முள்ளங்கி பயிர் செய்ததாகவும் தற்போது 45 நாட்களில் சுமார் 15 டன் அளவிற்கு முள்ளங்கி சாகுபடி கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒரு டன் முள்ளங்கி ரூ. 12 ஆயிரம் வரையில் விற்பனையானது.

அதனை நம்பி விவசாயிகள் அதிகளவில் முள்ளங்கி சாகுபடி செய்தனர். ஆனால் தற்போது அந்த விலை கிடைக்கவில்லை. இன்று ஒரு கிலோ முள்ளங்கி 3 ரூபாய்க்கும், ஒரு டன் ரூ. 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த விவசாயி ஜெயராமன், முள்ளங்கி விலை இல்லாததால் செலவுக்கு வரவுக்கும் சரியாகி விட்டதாக கவலையுடன் தெரிவித்தார்.