விவசாயம்

”குளத்தை தூர்வார அதிமுகவினர் முட்டுக்கட்டை போடுகின்றனர்” : கிராம மக்கள் புகார்

webteam

கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் எழும்பள்ளம் குளத்தை தூர்வார, மேல்மலை ஒன்றிய ஆளும் அரசியல் கட்சியினர் முட்டுக்கட்டை போடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில் உள்ள எழும்பள்ளம் குளத்தின், மறுகால் அணையில் நீர் கசிவு இருப்பதாக, கிராம மக்கள் புகார் அளித்தனர். அதனடிப்படையில் முன்னாள் கோட்டாட்சியர் சுரேந்திரன்,  2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஊர்மக்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அரசுக்கு திட்ட வரைவு அனுப்பப்பட்டு, அக்குளத்தை குடிமராமத்து செய்ய 90 லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டு, பணிகள் கடந்த மாதம் துவங்கின. பணிகள் துவங்கும் வரை எந்த வித தடங்கலும் இல்லாமல் இருந்த நிலையில், பணிகள் துவக்கப்பட்டவுடன், மேல்மலை ஒன்றிய அதிமுகவினர், தூர்வாரும் பணிகளை தொடர முட்டுக்கட்டை போட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திட்டம் வருவதற்கு எந்த உதவியும் செய்யாத ஆளும் கட்சியினர், திட்டம் துவங்கிய பிறகு அதனை தாங்கள் செய்வதுபோல தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும், இல்லை எனில் திட்டம் வரவிடாமல் தடுத்து விடுவோம் என ஊர்மக்களை மிரட்டுவதாகவும் மன்னவனூர் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த விசயத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, குளத்தை தூர் வாரி, குடி மராமத்து பணிகள் செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.