விவசாயம்

கன்னியாகுமரி: விளைச்சல் இருக்கு; ஆனால் விலை இல்லை... வேதனையில் கிராம்பு விவசாயிகள்!

கன்னியாகுமரி: விளைச்சல் இருக்கு; ஆனால் விலை இல்லை... வேதனையில் கிராம்பு விவசாயிகள்!

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் கிராம்பு அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. 1 கிலோ கிராம்பிற்கு கடந்த ஆண்டு 1000 ரூபாய் விலை கிடைத்த நிலையில் இந்த ஆண்டு 500 ரூபாய் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சமையலில் பயன்படுத்தப்படும் நறுமண பொருட்களில் கிராம்பு மிக முக்கியமானது. கிராம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் மருத்துவ துறையில் கிராம்பு ஒரு இன்றியமையாத பொருளாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கிராம்பு குமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மாறாமலை, பாலமோர், கரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.


சராசரியாக ஆண்டிற்கு 1000 டன் வரை கிராம்பு உற்பத்தியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கிராம்பு அறுவடை செய்யும் காலமாகும். தற்போது கரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கிராம்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக புதுக்கோட்டை, மதுரை, தேனி, வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் இங்குள்ள தோட்டங்களில் தங்கியிருந்து அறுவடை பணிகளை செய்து வருகிறார்கள். இங்கு அறுவடை செய்யப்பட்ட கிராம்புகளை சமதள வெளியில் உலரவைத்து பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தற்போது குமரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் கிராம்பிற்கு உரிய விலை கிடைக்கவில்லை என கிராம்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 900 முதல் 1000 ரூபாய் வரை விற்கப்பட்ட 1கிலோ கிராம்பு இந்த ஆண்டு 450 முதல் 500 வரை மட்டுமே விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


குமரி மாவட்டத்தில் பயிரிடப்படும் கிராம்பு உலகத்தரம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கிராம்பிற்கு சர்வதேச சந்தையில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில் தற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிராம்பிற்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் கிராம்பு இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் இங்கிருந்து இந்திய கிராம்பு எனக் கூறி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இங்குள்ள கிராம்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

மேலும் மாவட்டத்தில் பயிரிடப்படும் கிராம்புகளை நேரடியாக அரசே கொள்முதல் செய்து உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிராம்பிற்கு வரி விதிக்க வேண்டும் என்று மலை தோட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.