கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று விடியக்காலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் காரீப் பருவத்தில் பயிர்க் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில், சாகுபடி செய்த மணிலா மற்றும் கம்பு பயிர்களுக்கு 31.08.2021-க்குள் பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக விவசாயிகள் போதிய மழை இல்லாததால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வந்தனர்.
இதனிடையே இன்று அதிகாலையில் இருந்து கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலை 11 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ததால் பணிக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிறிது சிரமம் அடைந்து சென்றனர்.
மழை அதிகம் பெய்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றாக, காரீப் பருவத்தில் பயிர்க் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்த மணிலா மற்றும் கம்பு பயிர்களுக்கு 31.08.2021 வரை பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் தங்கள் பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் பாதிப்பு ஏற்படும்பொழுது, அப்பாதிப்பினால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்வதற்கும், வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்சியரின் அந்த அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் மணிலா மற்றும் கம்பு பயிர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர்க் காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு மணிலாவிற்கு ரூ.532-ம், கம்புக்கு ரூ.179-ம் அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகையினை செலுத்தி பதிவு செய்திட வேண்டும்.
இப்பயிர்க் காப்பீடு பதிவு செய்திட நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயர் மற்றும் விலாசம், நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வறிய வாய்ப்பினை மணிலா மற்றும் கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் பயன்படுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறவும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.