அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. புகழ்பெற்ற சோழப் பேரரசன் ராஜேந்திரசோழனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தின் அருகமை பகுதிகளிலே இந்த 10 கிணறுகள் அமையும் என்பதால், அக்கோயில் உள்ளிட்ட வரலாற்று தொன்மை மிக்க இடங்களுக்கு ஆபத்து என்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வில் பெரும்பூதம்போல கடந்த 15 ஆண்டுகளாக சுற்றி சுற்றி அடிக்கும் பெயர்கள் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள்தான். இப்பகுதிகளில் செயல்படுத்தபடவிருந்த மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக 2010-ஆம் ஆண்டு வாக்கில் மறைந்த இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் தீவிரமான போராட்டத்தை துவங்கி வைத்தார்.
அவரின் மறைவிற்கு பின்னரும் தொடர்ந்த கடுமையான போராட்டங்கள் காரணமாக மீத்தேன் திட்டம் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டது. அதன்பின்னர் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலிலும், ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்திலும் மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் வெடித்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இனிமேல் ஹைட்ரோகார்பன் அபாயங்கள் இருக்காது என்று மக்கள் சிறிதே பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் சூழலில் இப்போது மீண்டும் பழையபூதம் கதவைத்தட்ட ஆரம்பித்திருக்கிறது.
கடந்த ஜூன் 10ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதிக்கு அருகேயுள்ள கருக்காய்க்குறிச்சி வடத்தெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க சர்வதேச ஏலத்திற்கான அழைப்பாணையை மத்திய ஹைட்ரோகார்பன் இயக்குனரகம் வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து கண்டனக்குரல் எழுந்தது.
இந்தச்சூழலில், ஜூன் 15ஆம் தேதி ஓ.என்.ஜி.சி.நிறுவனம் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு, பெட்ரோலியம் சுரங்க குத்தகை திட்டத்தின்கீழ் (L-I PML) அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளும், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 5 ஹைட்ரோகார்பன் கிணறுகளும் அமைக்க திட்டம் தயாரித்துள்ளது. அதில், தற்சமயம் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க, தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன், “தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவாக அறிவித்துள்ள நிலையில், ஓ.என்.ஜி.சி சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடமே விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியைத் தருகிறது. இந்த விண்ணப்பம் விஷமத்தனமானது, இந்த விண்ணப்பம் உடனடியாக தமிழ்நாடு அரசால் நிராகரிக்கப்பட வேண்டும்.
2020 ஜனவரி 16 ஆம் தேதி இனி கருத்துக் கேட்பு இல்லாமலே எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்று இந்திய சுற்றுச்சூழல் துறை அனுமதித்து அறிவிக்கை வெளியிட்டது. இதைக் கண்டித்து அப்போதே போராட்டம் நடத்தினோம். அதுபோல மக்கள் கருத்துக் கேட்பையே இல்லாதொழிக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை EIA- 2020 வரைவை இந்திய அரசு அறிமுகம் செய்து, அதுகுறித்து மக்கள் கருத்தைப் பதிவிடலாம் என்று கடந்த 2020 ஆகஸ்டு மாதம் கூறியவுடன், 17 லட்சம் பேர் அதை எதிர்த்துக் கருத்துகளைப் பதிவு செய்தனர். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திணறிப் போனது. இந்நிலையில் கருத்துக்கேட்பு தேவையில்லை என்ற அந்த அறிவிக்கையையே காரணம் காட்டி, ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி அனுமதி கோருகிறது, அதை நாம் அனுமதிக்கக்கூடாது.
2020-ஆம் ஆண்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, மாவட்டங்களும் கடலூரில் ஐந்து வட்டங்கள், புதுக்கோட்டையில் ஐந்து வட்டங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. தொடக்கத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கியதாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமையும் என்று அன்றைய தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை.
ஆகவே அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களையும் உடனடியாகக் காவிரிப்படுகைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வேண்டுகிறோம். தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவாக எடுத்து அறிவிக்கை செய்ய வேண்டும். அதுவே நிரந்தரத் தீர்வாக அமையும்” என தெரிவித்தார்.
அரியலூரில் ஹைட்ரோகார்பன் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏற்படும் அபாயம் பற்றி விவரிக்கும் சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, “ தெற்காசியாவின் பெரும்பகுதிகளை வென்ற சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனால் தலைநகராக உருவாக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் அமைந்த மாவட்டம் அரியலூர். அந்தளவுக்கு செழுமைமிக்க பகுதியாக இம்மாவட்டம் இருந்தது. தென்புறம் கொள்ளிடம் ஆறும், வடபக்கம் வெள்ளாறும் எல்லையாக இருந்து இரு பாசனங்களும் இம்மாவட்டத்தை செழுமைப்படுத்துகிறது. கொள்ளிடத்தின் தண்ணீர் மூலமாக சோழர்கள் உருவாக்கிய வீராணம் ஏரி மற்றும் ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழகங்க பேரேரி எனப்படும் பொன்னேரி ஆகியவை நிரம்புகிறது. அரியலூர் மாவட்டத்தின் பெரும்பகுதி காவிரிப்பாசனப்பகுதியாகவே உள்ளது. காவிரிப்படுகையில்தான் ஹைட்ரோகார்பன் கிடைக்கிறது. எனவே அரியலூரையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும்.
ஏற்கெனவே அரியலூரில் 10-க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்கள் வரம்புக்கு மீறி, விதிகளுக்கு மாறாக வெட்டியெடுத்து சிமெண்ட் தயாரிக்கிறார்கள். இதன்காரணமாக இப்பகுதியில் சுற்றுச்சூழல், விவசாயம், நிலத்தடிநீர், காற்று, குடிநீர் அனைத்தும் மிக மோசமாக பாழடைந்துள்ளது. இந்த தொழிற்சாலைகள் காரணமாக அரியலூரின் மேற்கு பகுதியின் மண்ணும், மனிதர்களும் நோய்வாய்ப்பட்டுள்ளனர், சாலைவிபத்துகளும் மிக அதிகமாகவுள்ளது, இதற்காக ஏற்கெனவே அரியலூர் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் இன்னொரு ஆபத்தும் வந்தால் அரியலூர் தாங்காது. ஒருகாலத்தில் வளமையான விவசாய பூமியாக இருந்த அரியலூரின் மேற்கு பகுதிகள் இப்போது சிமெண்ட் தொழிற்சாலைகளால் வறண்டுவிட்டது, கிழக்குப்பகுதிகளுக்கும் இப்போது ஆபத்து வந்துள்ளது.
அரியலூரில் ஜெயங்கொண்டம், உடையார் பாளையத்திற்கு கிழக்கே நிலக்கரி மற்றும் ஹைட்ரோகார்பன் உள்ளதாக அறியப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கும், பொன்னேரிக்கும் இடைப்பட்ட பகுதியில் குருவாலப்பர் கோவில் உள்ளது. இதனையொட்டிய பல பகுதிகளில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே ஹைட்ரோகார்பன் ஆய்வுப்பணிகளை செய்துள்ளனர். ஒருவேளை இப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட்டால் யுனெஸ்கோவின் பாதுகாப்பில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட தொன்மைமிக்க கோயில்கள் மற்றும் வரலாற்று சின்ன்ங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் அருகிலேயே குருவாலப்பர் கோயில் உள்ளது. எனவே இப்பகுதியையொட்டி ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட்டால் இந்த தமிழர்களின் பாரம்பரிய சின்னங்கள் சிதையும் ஆபத்து உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அரியலூர் மற்றும் கடலூரில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை நிராகரிக்கவேண்டும்” என்கிறார்.