விவசாயம்

எளிதில் நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரம்: சகோதரர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு

எளிதில் நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரம்: சகோதரர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு

webteam

வீட்டு கிரைண்டரை பயன்படுத்தி வேரிலிருந்து நிலக்கடலையை தனியாக பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கிய இரட்டை சகோதரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நிலக்கடலை தமிழ்நாட்டில் அதிகம் பயிரிடப்படும் ஒரு பயிர். இதை 90-120 நாட்களில் சாகுபடி செய்யலாம். இந்த பயிரில் ஒரு பெரிய வேலை என்னவென்றால் வேரோடு எடுக்கப்பட்ட நிலக்கடலையை தனியே பிரித்து எடுப்பதும் பிரித்தெடுக்கப்பட்ட நிலக்கடலையில் இருந்து மேல் ஓடு பிரித்து எடுப்பதும்தான். இந்த வேலை அதிக பேரையும் அதிக நேரத்தையும் எடுத்து கொள்ளும். ஒரு ஏக்கருக்கு 20-30 வேலை ஆட்கள் தேவை.

வேலை ஆட்கள் பற்றாக்குறை உள்ள சூழலில் மிகப்பெரிய இந்த பிரச்னையை போக்க காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த இரு பட்டதாரி சகோதரர்கள் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதாவது செடியிலிருந்து நிலக்கடலை பிரிக்கும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இரண்டு நாட்கள் செய்ய வேண்டிய வேலையை வெறும் 3 மணி நேரத்தில் இவர்கள் கண்டுபிடித்த இயந்திரம் செய்து முடித்து விடும் என்பது விவசாயிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியம் சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை விலங்கியல் பட்டதாரி பரத் மற்றும் பி.இ. படித்த அவருடைய சகோதரர் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து வீட்டில் பயன்படுத்திவரும் கிரைண்டர் மற்றும் உழவிற்க்கு பயன்படும் ரோலரை வைத்து நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

அந்த இயந்திரத்தின் மேற்புறமிருந்து கடலைக் செடியை உள்ளே செலுத்தினால் கடலைகள் தனித்தனியே பிரிந்து வந்து விழுகின்றன. வெறும் 3 மணி நேரத்தில் மூன்று மூட்டை கடலைகளை அதன் செடியிலிருந்து மிகவும் எளிதாக பிரித்து எடுக்க முடிகிறது. சாதாரணமாக மூன்று மூட்டைகள் நிலகடலைகளை அதன் செடியிலிருந்து பிரித்தெடுப்பதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஆகும் செலவு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே எனத் தெரிவிக்கின்றனர்.