தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி வரத்து அதிகரிப்பால், விலை குறைந்து கிலோ ரூ.8-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 40 நாட்களில் அறுவடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நல்ல மழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது மாரண்டஹள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதையடுத்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முள்ளங்கி வரத்து குறைந்து விலை உயர்ந்து கிலோ ரூ.20-க்கு விற்பனையானது. இதனால் கடந்த ஓராண்டிற்குப் பிறகு விலை ஏற்றம் கண்டுள்ளதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது முள்ளங்கி விளைச்சல் மற்றும் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முள்ளிங்கி விலை குறைந்து கிலோ ரூ.8-க்கு விற்பனையாகிறது.
மேலும் விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.3, 4 என, அடிமட்ட விலைக்கே வாங்கிச் செல்கின்றனர். இதனால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்கவில்லை. கடந்த இரண்டு மாதமாக விலை ஏற்றமில்லாமல், இருப்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.