விவசாயம்

பருவமழையால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன

பருவமழையால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன

webteam

தொடர்ந்து பெய்த பருவமழையால் நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நாகை மாவட்டத்தில் கடந்த 28ம் தேதி ஆரம்பித்த வடகிழக்குப்பருவமழை, 30ம் தேதி கனமழையாக பெய்யத்துவங்கியது. இடைவிடாதுதொடர்ந்த மழை காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, பாசன ஆறுகள், வாய்க்கால்கள், தண்ணீர் வடியும் வடிகால் ஆறுகள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. அத்துடன் பல்வேறு ஆறுகளின் கரைகள் உடைந்து, வயல்கள், வீடுகள் இவற்றில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மயிலாடுதுறை கோட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் சம்பா நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இவற்றில், 80 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. 

மேலும் சீர்காழி தாலுகா, தரங்கம்பாடி தாலுகா, குத்தாலம் தாலுகா, மயிலாடுதுறை தாலுகா பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நடவு செய்த பத்து நாட்களுக்கும் குறைவான வயதுடைய பயிர்கள் நீரில் மூழ்கியதால், இளம் நாற்றுகள் அழுகத்துவங்கியுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 8 நாட்களாக கனமழை பெய்துவந்தது. நேற்று மாலை வரை மழை விட்டிருந்த நிலையில், இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.